அடிப்பகுதி வழியாக கசியும் தண்ணீர்... வனப்பகுதியில் தரமற்ற தடுப்பணைகள்

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்து வனப்பகுதிகள் நிறைந்துள்ளன. மலைகள் மற்றும் காடுகளின் வளத்தை பொறுத்து அந்த பகுதியின் தட்ப வெப்ப சூழல் அமைகிறது. மழை பொழிவிற்கும் காரணமாக உள்ளது. அரசு பல்வேறு திட்டங்கள் தீட்டி காடுகளை பாதுகாத்து மேன்மைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு பரப்பளவை அதிகப்படுத்துவதற்காக தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் போன்ற சட்டங்களை அமல்படுத்துகிறது. இதேபோன்று காடுகளிலுள்ள வன விலங்குகள் தண்ணீருக்காக அலைவதை தடுப்பதற்கும் நிலத்தடி நீரின் அளவை அதிகரிப்பதற்கும் நீரோடைகளின் குறுக்கே தடுப்பணைகளை அமைப்பதற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காடுகளில் நில சரிவு, மண் அரிப்பு தடுப்பு போன்றவைகளுக்காக வனத் துறையால் பல திட்டங்கள் டெண்டர் இல்லாமல் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் மண் அரிப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் பெரும்பாலானவை, வீண் செலவாகவே அமைந்துள்ளது. சரியான திட்டமிடல், மதிப்பீடுகள் தயாரிப்பு பணிகளின் தன்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளாதது போன்றவைகள் இதற்கு காரணம் ஆகும். இதேபோன்று காடுகளில் உள்ள விலங்குகளின் குடிநீராதாரத்திற்காகவும், வறட்சி காலங்களில் காடுகளின் வளம் குன்றாமல் இருப்பதற்காகவும், ஏராளமான இடங்களில் சிறிய தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடர்ந்த காட்டுப் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வறட்சியினால் ஏற்படும் பாதிப்பு குறைக்கப்படுகிறது. இதற்காக அரசு கோடிக்கணக்கான பணம் செலவிடுகிறது. காட்டு பகுதிகளில் நடைபெறும் பணிகள் முறைபடுத்தப்படாததால் அவை பல பயன்பாடற்று உள்ளன.

காடுகளில் நீரோடைகளின் குறுக்கே தடுப்பணைகள் ஏற்படுத்தும் போது அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிரம்பி வழிந்து செல்ல வேண்டும். ஆனால் இங்கு கட்டப்படும் எந்த அணைகளிலும் தண்ணீர் தேங்குவதில்லை. தடுப்பணை சுவரின் அடிப்பகுதி வழியாக தண்ணீர் கசிந்து செல்கிறது. அந்த அளவிற்கு அடித்தளம் இல்லாமல் மேலோட்டமாக தடுப்பணைகள் கட்டப்பட்டு பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொலைநோக்கு பார்வையுடன் செய்யவேண்டிய பணிகள் பயன்படாமல் வீணாகிவிடுகிறது. மழைகாலங்களில் நீரோடைகளில் தண்ணீர் அதிக அளவு வரும்போது அடித்தளம் முறையாக இல்லாமல் முறைகேடாக செய்யப்பட்டுள்ள தடுப்பணைகளை அடித்துச் சென்றுவிடுகிறது. காடுகளின் வளம் பெருகுவதற்கும் வன விலங்குகளின் பெருக்கத்திற்கும் திட்டமிடும் அரசு மக்கள் பார்வையில் படாத காட்டுப் பகுதிகளில் செய்யப்படும் இந்த பணிகள் செம்மையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

6 மாதத்தில் காணாமல் போகும் தடுப்பணைகள்

இதுகுறித்து வனபகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் கூறுகையில் விறகிற்காக உயர்ந்த மரக்கிளைகளை எடுத்தால் உடனடியாக வனதுறையின் நடவடிக்கை பாய்கிறது. காடுகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதி எத்தகைய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு கண்காணிப்புகள் இல்லை. குமரி மாவட்டத்தில் காடுகளை வளப்படுத்துவதற்காக ஏராளமான மண் அரிப்பு தடுப்பு சுவர்கள் 6 மாதங்கள்கூட தாக்குப் பிடிப்பதில்லை. இதேபோன்று நீரோடைகளின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைகள் அடித்தளம் இல்லாமல் தரைமட்டத்தில் மேலோட்டமாக கட்டுகின்றனர். அதன்பின்னர் புகைப்படம் எடுத்து தடுப்பணை கட்டியதாக கணக்கு காட்டப்படுகிறது. இவைகள் 6 மாதத்தில் காணாமல் போய்விடுகிறது. இதற்கு அரசு தகுந்த விதிமுறைகளை உருவாக்கி பணிகள் 100 சதவிகிதம் நேர்மையாக நடைபெறுவதற்கு வழி செய்ய வேண்டுமென்று கூறினார்.

Related Stories: