கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: 17 அமைச்சர்களுக்கு வாய்ப்பு...ஆளுநருக்கு முதல்வர் எடியூரப்பா கடிதம்

பெங்களூரு: கர்நாடகாவில் 14 மாதங்களாக பதவி வகித்து வந்த குமாரசாமி தலைமையில் இருந்த காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி ஜுலை 23-ஆம் தேதி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைந்தது. கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி மாநில முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அப்போது அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எடியூரப்பா வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இதுவரை அதற்கு நேரம் வாய்க்கவில்லை. வட கர்நாடகாவில் பலத்த மழை, காஷ்மீர் மாநிலம் பிரிப்பு, எம்எல்ஏ பதவி இழந்த 17 பேர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது ஆகியவற்றால் அமைச்சரவை விரிவாக்கம் தாமதமானது.

இந்நிலையில்,கடந்த 18-ம் தேதி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, வரும் 20-ம் தேதி (இன்று)கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், பாஜக  சட்டமன்ற கட்சிக்கூட்டம் அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பின்பே நடைபெறும் என்றும் எடியூரப்பா தகவல் தெரிவித்தார். கர்நாடகா அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய கட்சி மேலிட அனுமதி பெற்றதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் இன்று 17 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி மாநில ஆளுநருக்கு முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

13 முதல் 14 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்ற நிலையில் 17 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: