ஒப்பந்ததாரர் மாமூல் தர மறுத்ததால் தொழிலாளியை காரில் கடத்திய 2 பேர் போலீசில் பிடிபட்டனர்

திருவொற்றியூர்: மாநகராட்சி ஒப்பந்ததாரர் மாமூல் தர மறுத்ததால், அவரிடம் பணிபுரியும் தொழிலாளியை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (27). சென்னை மாநகராட்சி கான்ட்ராக்டர்  ஒருவரிடம் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை எண்ணூர் தாழங்குப்பம் பேருந்து நிறுத்த நிழற்குடையை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த தாழங்குப்பத்தை  சேர்ந்த கிளிண்டன் (25), தினேஷ் (25) ஆகிய 2 பேர், ‘‘இங்கு வேலை செய்வதாக இருந்தால், ஒப்பந்ததாரரிடம்  பேசி எங்களுக்கு மாமூல்  வாங்கி தர வேண்டும்,’’ என கூறியுள்ளனர். இதுபற்றி சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு சென்போன் மூலம்  பாலமுருகன் தகவல் தெரிவித்தார். அதற்கு அவர், ‘‘பணம் ஏதும் தரமுடியாது,’’ என்று கூறியுள்ளார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த கிளிண்டன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும், பாலமுருகனை காரில் கடத்திச் சென்று, மீஞ்சூர் அத்திப்பட்டு அருகே சாலையோரம் காரை நிறுத்தி, ‘‘ஒப்பந்ததாரரிடம் மாமூல் பெற்றுத் தரவில்லை என்றால்  உன்னை விட மாட்டோம்,’’ என்று  மிரட்டியுள்ளனர்.  அப்போது, மீஞ்சூர் போலீசார் அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்த பாலமுருகன், காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டார். உடனே போலீசார் கார்  அருகே வந்தனர். இதை பார்த்து கிளிண்டன், தினேஷ் ஆகிய இருவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில், மாமூல் கேட்டு பாலமுருகனை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் எண்ணூர்    காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

Related Stories: