தாம்பரம் மார்க்கெட், கொருக்குப்பேட்டை பகுதிகளில் கால்வாய் அடைப்பால் கழிவுநீர் தேக்கம்: பொதுமக்கள் அவதி

* வாகனங்கள் செல்லும் போது சாலை பள்ளங்களில் தேங்கியுள்ள கழிவுநீர், சிதறி பாதசாரிகள் மீது விழுகிறது. இதனால், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

தாம்பரம்: தாம்பரம் மார்க்கெட் சாலையில் கால்வாய் அடைப்பால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். தாம்பரம் சண்முகம் சாலையில் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு காய்கறி கடைகள்,  பழக்கடைகள், மளிகை, பூக்கடை, ஓட்டல்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. தாம்பரம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்கு  தினசரி இங்கு வந்து செல்கின்றனர். இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும் மேற்கு தாம்பரத்தில் உள்ள மாந்தோப்பு, நியூ ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து தாம்பரம் பேருந்து நிலையம், ரயில்  நிலையம் ஆகியவற்றுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், வேலைக்கு செல்வோர் என அனைத்து மக்களும் இந்த சண்முகம் சாலை வழியாகத் தான் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் உள்ள கால்வாயில் கடந்த 2 நாட்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.  மேலும், பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தினசரி ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த சாலையில் கழிவுநீர் தேங்குவதை அதிகாரிகள் உடனடியாக சரி செய்யாததால், கடந்த 2  நாட்களாக சிரமத்துடன் நடந்து செல்கிறோம். ஆங்காங்கே சாலை பள்ளங்களில் தேங்கியுள்ள கழிவுநீர், வாகனங்கள் செல்லும் போது சிதறி பாதசாரிகள் மீது விழுகிறது.  இதனால், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு  ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் பகுதியில் உள்ள 4 தெருக்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இங்குள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர்  வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், கொசு உற்பத்தி அதிகரித்து மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கால்வாய் அடைப்பால் கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம்  புகார் செய்தால் அலட்சியமாக உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கால்வாய் அடைப்பை சரிசெய்து கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் விரைவில் போராட்டம்  நடத்துவோம்,’’ என்றனர்.

Related Stories: