×

முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி: அமைச்சர் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக தின விழா, ராணுவ நிறுவன மையத்தில் நடைபெற்றது. முன்னாள் படைவீரர்கள் குடும்பதைச் சேர்ந்த 4 நபர்களுக்கு தலா 3 லட்சம் வீதம் 12 லட்சம் விபத்து காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் நிதி  உதவியும், டெக்ஸ்கோ தின விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது: முப்படை பணியில்,  தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்களின் வீர தீரச் செயல்கள், மற்றும் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக வழங்கப்படும் விருதுகளுக்கான தொகை 2 முறை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள்  கழகத்தின் மூலம் மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 4,105 முன்னாள் படை வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டெக்ஸ்கோவின் அனைத்து ஒப்பந்த பணியாளர்களுக்கும் 3 லட்சம் வரை  இழப்பீடு பெறும் வகையில் விபத்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளில் 42 குடும்பங்கள் 126 லட்சம் அளவிற்கு பயன்பெற்றுள்ளனர். டெக்ஸ்கோவால் சிபாரிசு செய்யப்படும் அனைத்து பணியாளர்களுக்கும் கணினி பயிற்சி, ஓட்டுநர் பயிற்சி, கைபேசி பழுதுபார்த்தல், தீயணைப்பு மற்றும்  மீட்புப்பணி உள்ளிட்ட செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.  3,686 முன்னாள் படைவீரர்களுக்கு ₹69.9 லட்சம் செலவில் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. டெஸ்க்கோ மூலம் தற்போது பணியாற்றி வரும் 5,175  பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தினை 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இயற்கை மரணம் அடையும் பணியாளர்களுக்கு 5000 வீதம் ஈமச்சடங்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் படைவீரர் நலக் கழகத்தின்  மூலம் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு சேவைகளின் மூலம் 1,661.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது, நிகர லாபமாக மட்டும் 119.41 கோடி ஈட்டப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில், பொதுத்துறை முதன்மைச் செயலாளர்டாக்டர் பி.செந்தில்குமார்,சிறப்புச் செயலாளர், டெக்ஸ்கோ மேலாண்மை இயக்குநர் மைதிலி ராஜேந்திரன்,  டெக்ஸ்கோ இயக்குநர்கள், கர்னல் னிவாசன், கேப்டன் மகாதேவன், விங்  கமாண்டர் ராமகிருஷ்ணன், பாலாஜி, பேராசிரியர் வெங்கட பாலசுப்பிரமணியம், மேஜர் ஜெயக்குமார், கர்னல் பிரேம்குமார்,  அருண்குமார், டெக்ஸ்கோ பொது மேலாளர் சாரதா ஆகியோர் பங்கேற்றனர்.



Tags : Former Veterans, Financial Assistance to Families, Minister
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...