ஈஞ்சம்பாக்கத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வந்தவர்களின் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்

* மாணவர்கள் பங்கேற்பு

* கடைகள் அடைப்பு

* மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வந்தவர்களின் வீடுகளை அகற்றும் முடிவை கண்டித்து பொதுமக்கள், மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இடம் சதுப்பு நில  பகுதி என்பதால் இதனை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த சேகர் என்பவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அங்குள்ள வீடுகளை அகற்றும்படி வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி அங்கு வசித்து வந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினர். மேலும், பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், “நாங்கள் 30 ஆண்டுகளாக இங்கு வசித்து  வருகிறோம். எனவே எங்களை அகற்ற கூடாது” என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை சார்பில் நேற்று தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இதில், பேரவை  நிர்வாகிகள் விடுதலை செழியன், நாராயணன், தணிகாசலம் முன்னிலையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஈஞ்சம்பாக்கம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு  செல்லவில்லை.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “நாங்கள் வசிக்கும் பகுதியை நத்தமாக வகை மாற்றம் செய்திட கலைஞர் ஆட்சியில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில்  அரசாணை நிலம் எண் 43/2015ன் கீழ் பெத்தேல் நகருக்கு பட்டா வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் கலெக்டர் கஜலட்சுமி, ஆய்வு செய்து பட்டா வழங்கலாம் என்று அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலம் மேய்க்கால் வகையை சார்ந்தது என வருவாய் துறை, வனத்துறை உறுதிபடுத்தி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 2017ம் ஆண்டு, நீதிபதிகள் அமர்வு பெத்தேல் நகர் நிலம் குறித்து வரையறை செய்து  முடிவெடுக்கலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது. கடந்த பிப்ரவரியில், அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பொதுமக்களே முதலாளிகள் என்று ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ்,  நாங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், பெத்தேல் நகரில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தி பெரும்பாக்கத்துக்கு கொண்டு செல்வோம். பிறகு, இந்த நிலத்தை வகை மாற்றம் செய்து, அடுக்குமாடி வீடுகளை கட்டி அவர்களை மீண்டும்  குடியேற்றுவோம் என்றார். இது, ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு மாறானது. எனவே, எங்களை அப்புறப்படுத்த கூடாது” என்றனர். இதில் கலந்துகொண்ட சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்ரமணியன் பேசியதாவது:  மக்களுக்காக சட்டரீதியான பிரச்னைகளுக்கு திமுக உறுதுணையாக இருக்கும். சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு  பதில் அளித்த அமைச்சர் முதலில் பெத்தேல் நகர் பகுதி மக்களை அப்புறப்படுத்தி பெரும்பாக்கத்திற்கு கொண்டு செல்வோம். பிறகு இந்த நிலத்தை வகை மாற்றம் செய்வோம். அதன்பிறகு மீண்டும் இவர்களை இங்கு கொண்டு வந்து அடுக்குமாடி  குடியிருப்பில் குடிேயற்றுவோம் என ெசால்லியிருக்கிறார். இப்படி ஒரு அமைச்சரை தமிழகம் பெற்றிருப்பது அவமானமாக உள்ளது. கலைஞர் ஆட்சியில் இங்குள்ள 40 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உண்மை நிலையை வெளி கொண்டுவர அதிகாரிகள் தொடை நடுங்குகின்றனர். இப்பகுதிக்கு அதிகாரிகள் வந்தால் பெருங்குடி குப்பை அகற்றும் இடம் நீர் நிலைதான். அதை முதலில் அகற்றுங்கள். பின்பு இங்கு வாருங்கள். அரசு  உண்மை நிலையை நீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும். ஒற்றை காகித தாளில் நிலத்தை வகை மாற்றம் செய்து இங்கு குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கலாம். அப்படி செய்யவில்லை என்றால் உள்நோக்கம் உள்ளது. உடனடியாக இப்பகுதி  மக்களுக்கு பட்டா வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும். என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ேபசுகையில், “தனி நபர் ஒருவர் சதுப்பு நிலம் என நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலம்  மேய்க்கால் புறம்போக்கு என்கிற உண்மை நிலையை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

இந்த விஷயத்தில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். திட்டமிட்டு உண்மையை மூடி மறைத்து உள்ளனர். அரசுக்கு சொந்தமான நிலத்தை ஒருவர் குடிசைபோட்டு ஆக்கிரமிக்கும்போதே தடுத்திருக்க வேண்டும். வருவாய் துறை, காவல்துறை  கவனத்திற்கு செல்லாமல் இருந்திருக்காது. அதிகாரிகளே உடந்தையாக இருந்துவிட்டு சாலை குடிநீர் போன்ற வசதிகள் கொடுத்துவிட்டு 30 ஆண்டுகளாக குடியிருந்த பகுதியை திடீரென காலி செய்ய சொல்வது எந்த விதத்தில் நியாயம்.  கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு பின்னர் தான் வீடு கட்டவேண்டும். ஆனால் 200 மீட்டர் தொலைவுக்கு சிலர் வீடு கட்டியுள்ளனர். அதை அகற்றமுடியுமா? எனவே இந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்.” என்றார்.

அரசியல் கட்சியினர் ஆதரவு

பொதுமக்களின் உண்ணாவிரத போராட்டத்தில், டி.கே.ரங்கராஜன் எம்பி,  தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக  பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, மதிமுக மல்லை   சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு  வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், அமமுக மாவட்ட செயலாளர்  கரிகாலன் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: