காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் தோவல் விளக்கம்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சந்தித்து, காஷ்மீர் நிலவரம் குறித்து விளக்கினார்.ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை கடந்த 5ம் தேதி மத்திய  அரசு ரத்து செய்தது. இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கும் வகையில் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  வதந்திகள், பொய்  செய்திகள் உள்ளிட்டவை சமூக வலைதளம் மூலம் பரவுவதை தவிர்க்கும் வகையில் மொபைல் இன்டர்நெட் சேவைகள் முடக்கம் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு நிலவும் சூழல் குறித்து நேரடியாக பார்வையிட்டு அறிந்து கொள்ளும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் சென்றார். அங்குள்ள நிலவரங்களை நேரில்  பார்வையிட்டார். சுமார்  10 நாட்கள் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அங்கு தங்கியிருந்து நிலைமை குறித்து கண்காணித்தார். அங்கு அமைதியான சூழல் நிலவியதை அடுத்து தற்போது படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு  வருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீரில் மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.இந்நிலையில்  நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் மீண்டும் தடை மற்றும் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காஷ்மீரில் இருந்து திரும்பியுள்ள பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்து பேசினார். காஷ்மீர் நிலவரம், அங்கு நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சட்டம்  ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டது. உள்துறை செயலாளர் ராஜிவ் குப்தா மற்றும் உயரதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பொய் செய்தி பரப்புவதாக மாணவர் தலைவர் மீது வழக்கு

காஷ்மீர் நிலவரம் தொடர்பாக  மாணவர் இயக்க தலைவர் ஷேக்லா ரஷீத் தனது டிவிட்டர் பக்கத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை பதிவிட்டார். அப்பாவிகளை ராணுவம் கொடூரமாக சித்ரவதை செய்வதாக தனது பதிவில் ஷேக்லா  குறிப்பிட்டு இருந்தார். ஆனால் ராணுவம் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிலையில் ராணுவம் குறித்து பொய்யான செய்தியை பரப்புவதாக ஷேக்லா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலாக் அல்லோக் வஸ்தவா  வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: