22ம் தேதி பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு பயணம்

புதுடெல்லி: பிரதமர் மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின் மாலத்தீவு, இலங்கை, பூடான்  நாடுகளுக்கு அரசு முறை பயணமாகவும், எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் மற்றும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பானுக்கு சென்று வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, தற்போது பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் நாடுகளுக்கும்  அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 22ம் தேதி பிரான்ஸ் செல்லும் அவர் அந்நாட்டு அதிபர் மேக்ரானை சந்தித்து பேச உள்ளார்.

அங்கிருந்து, வரும் 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அபுதாபியில் மன்னர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நயன், பட்டத்து இளவரசர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார் அங்கு பிரதமர்  மோடிக்கு, அமீரக அரசால் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட அந்நாட்டின் உயரிய விருது நேரடியாக வழங்கப்படுகிறது. பின்னர் 24ம் தேதி பக்ரைன் செல்லும் அவர் 25ம் தேதி மீண்டும் பிரான்ஸ் திரும்புகிறார். அங்கு  பியாரிட்ஸ் நகரில்  நடக்கும் ஜி7 நாடுகள் மாநாட்டில் நட்பு நாடு அடிப்படையில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Related Stories: