×

வருசநாடு மலைக்கிராமங்களை காலி செய்ய நோட்டீஸ்

* 2 ஆயிரம் பேர் போராட்டம் * வனத்துறையினரிடம் வாக்குவாதம்

வருசநாடு: வருசநாடு அருகே மலைக்கிராமங்களை காலி செய்யும்படி வனத்துறை நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து, கடமலைக்குண்டுவில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள் கலந்து  கொண்டனர்.தேனி மாவட்டம், கடமலை - மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்டு அரசரடி, வெள்ளிமலை, பொம்மராஜபுரம், இந்திராநகர், நொச்சிஓடை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த  கிராமங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை அறிவித்தது. மேலும், வரும் 28ம் தேதிக்குள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டும் என வனத்துறையினர் வீடு வீடாக நோட்டீஸ் வழங்கி  வருகின்றனர்.

இதை கண்டித்து கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்து மனு கொடுக்க நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், பழங்குடியினர் வாகனங்களில் கிளம்பினர். அவர்களை வெள்ளிமலை, மஞ்சனூத்து, அரசரடி உள்ளிட்ட  சோதனைச்சாவடிகளில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். சோதனைச்சாவடிகளில் வனத்துறையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் கடமலைக்குண்டு கிராமத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வனத்துறையை கண்டித்து போராட்டம் நடந்தது. இதில் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம்,  மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், மாவட்ட செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் போஸ்லே சச்சின் துக்காராம், சங்க நிர்வாகிகள் மற்றும் மலைக்கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மலைக்கிராம மக்களின் கோரிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை  செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் மலைக்கிராமங்களின் முக்கிய பிரமுகர்கள் 100 பேர் கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர்.



Tags : Varshanad ,hilltops, Notices ,vacate
× RELATED கடலோர பகுதிகளில் கட்டுமானங்களுக்கு...