×

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற தலைமைச்செயலர் தலைமையில் குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு: 13 மாவட்ட கலெக்டர், எம்பி, எம்எல்ஏக்களுடன் ஆலோசித்து அக்.3ல் அறிக்கை தர வேண்டும்

மதுரை: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி மீட்பது குறித்து தலைமைச்செயலர் தலைமையில், துறை செயலர்கள், 13 மாவட்ட கலெக்டர்கள், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். இக்குழு ஆலோசனைக்கூட்டம்  நடத்தி, அக். 3க்குள் அறிக்கை தாக்கல் செய்ய  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த வக்கீல் அருண்நிதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள், நீர்வழித் தடங்களிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், தூர்வாரி தண்ணீரை தேக்கவும்  உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.இதேபோல் ஐகோர்ட் கிளையின் எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில், பல்வேறு பகுதியிலுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் கிளை, ‘‘நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி ஆழப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்ய வக்கீல்களைக் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்படுகிறது. நீர்  மேலாண்மைக்கு தேவையான ஆலோசனைகளை நிபுணர்கள் ஏ.சி.காமராஜ், நடராஜன் ஆகியோர் வழங்கலாம்.  தமிழகத்திலுள்ள கண்மாய், குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் பற்றிய விபரங்களை, பொதுப்பணித்துறை மற்றும் அந்தந்த மாவட்ட  நிர்வாகங்களின் வெப்சைட்டில் வெளியிட வேண்டும்’’ என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஆலோசிக்க, தமிழக தலைமைச்செயலர் தலைமையில் பொதுப்பணித்துறை செயலர், நகராட்சி நிர்வாகத்துறை செயலர், ஊரக வளர்ச்சித்துறை செயலர், ஐகோர்ட் கிளை எல்லைக்கு  உட்பட்ட 13 மாவட்ட கலெக்டர்கள், இந்தப்பகுதிக்கு உட்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழு  நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திலுள்ள நீர்நிலைகளின் தற்போதைய நிலை, இவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகள், அதை அகற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும். இதன் விவரத்தை,  தலைமைச்செயலர் தரப்பில் அறிக்கையாக அக். 3க்குள் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர். பின்னர் மனுக்கள் மீதான விசாரணையை ஆக. 28க்கு தள்ளி வைத்தனர்.



Tags : Eliminate aggression , water bodies,committee, Collector, MP, MLA
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...