×

மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அங்கீகாரம் அன்புமணி மீதான வழக்கு வரும் 29ம்தேதி விசாரணை: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கிய விவகாரத்தில் அன்புமணி மீதான வழக்கை வரும் 29ம் தேதி விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பாமகவை சேர்ந்த அன்புமணி இருந்தபோது உத்தரபிரதேசத்தில் ரோஹில்கந்த் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இந்தூரில் இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வு  மையத்திற்கு முறைகேடாக அனுமதி அளித்ததாக அவர் உள்பட 9 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் அன்புமணி உள்ளிட்டோர் மீது  சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.தன் மீதான குற்றப்பத்திரிகையை நிராகரித்து விசாரணைக்கு தடை விதிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அன்புமணி மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், “அன்புமணி மீது கீழமை நீதிமன்றம் 2015 அக்டோபர் 7ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும், இதில் அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்தபோது  எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை மனுதாரர்களுக்கு வழங்கிய பிறகு சிபிஐ நீதிமன்றம் இந்த வழக்கை புதியதாக விசாரிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தது.டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அருண் குமார் கர் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுதொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம்  வழங்கியுள்ள உத்தரவை தெரிவித்து அதன் நகலை தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கை ஆகஸ்ட் 29ம் தேதி விசாரிப்பதாக ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.



Tags : Unauthorized, Medical College,Anumani, March 29
× RELATED 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ...