வீடுகளை அகற்ற கடும் எதிர்ப்பு பேச்சிப்பாறை ஜீரோ பாயின்ட்டில் அனைத்துக்கட்சியினர் மறியல்: எம்பி, 5 எம்எல்ஏக்கள் பங்கேற்பு

அருமனை: பேச்சிப்பாறை ஜீரோபாயின்ட்டில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சிப்பாறை ஜீரோபாயின்ட் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் உலக வங்கி நிதி உதவியுடன் பேச்சிப்பாறை அணையில் சாய்வணை கட்டும்பணி  மற்றும் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதியும், இந்த பகுதியில் அணையின் கீழ்பகுதியில் அரசு நிலத்தில் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில்  நோட்டீஸ் வழங்கப்பட்டது.

 அங்கு குடியிருக்கும் மக்கள் தங்களை அப்புறப்படுத்த கூடாது என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சில வீடுகளும் அதை சுற்றி உள்ள பகுதிகளும் இடிக்கப்பட்டது. பேச்சிப்பாறை சமத்துவபுரத்தின்  பின்பகுதியில் இந்த பகுதி மக்களுக்கு இடம் வழங்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பகுதி குடியிருப்பதற்கு ஏற்ற இடம் இல்லை. எனவே ஜீரோ பாயின்ட் பகுதி அருகே உள்ள புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி,  வீடுகட்டுவதற்கு நிதிஉதவியும் வழங்கவும், மாற்று ஏற்பாடு செய்யும் வரை இந்த வீடுகளை இடிக்க கூடாது எனவும் வலியுறுத்தி நேற்று அனைத்து கட்சி சார்பில் பேச்சிப்பாறை ஜீரோ பாயின்ட் பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

வசந்தகுமார் எம்பி, எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், பிரின்ஸ், ராஜேஷ்குமார், மனோதங்கராஜ் ஆகிேயார் பேசினர். இதில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள்  கலந்து கொண்டனர். மறியலின் போது அந்த வழியாக வந்த 2  அரசு பஸ்களை பொது மக்கள் சிறைபிடித்தனர். போராட்டத்தின் போது நடுரோட்டில் கஞ்சி காய்ச்சினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விளவங்கோடு தாசில்தார் புரந்தரதாஸ், தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 5 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: