தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எந்த தொழில்நுட்பத்தில் தூர்வாரப்படுகின்றன: அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: நெல்லை மாவட்டம், கூனியூரை சேர்ந்த சுந்தரவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லையிலுள்ள பிராஞ்சேரிகுளம் மற்றும் சுப்ரமணியபுரம் குளம் ஆகியவற்றில் தூர்வாரும் பணி நடந்தது. அரசு விதிப்படி கண்மாய் மற்றும் குளங்களை தூர்வாரிய பின் கரைகளை பலப்படுத்தி சமன் செய்ய வேண்டும். கரையை முக்கால் அடி  உயர்த்தி பலப்படுத்த வேண்டும். ஆனால் தற்போது நடந்த தூர்வாரும் பணியை, எங்கும் முறையாக விதிகள்  பின்பற்றவில்லை. ராமநாதபுரம், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் நடந்த தூர்வாரும் பணிகளிலும் இதே போன்று பெயரளவிலேயே பணிகள் நடந்துள்ளன. தூர்வாரும் பணிகள் முடிந்த பிறகு அவற்றின் தரத்தை, பல்கலைக்கழக பொறியாளர்கள் ஆய்வு  செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதை எங்கும் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தூர்வாருவதற்காக நபார்டு வங்கி ஒதுக்கிய ₹500 கோடி நிதியை முறையாக செலவிடவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு தமிழகத்தில் உள்ள கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணியை அரசு விதிப்படி,  மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். பின்னர், தமிழகத்திலுள்ள நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் பலப்படுத்தல் போன்ற பணிகள் எதன் அடிப்படையில், எந்த தொழில்நுட்பத்தின் மூலம்  மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து, பொதுப்பணித்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை செப்.16க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: