அதிகாரிகளை நம்பி பலனில்லை என்பதால் அதிரடி கன்னடியன் கால்வாய் பாலத்தை சீரமைத்த மக்கள்

வீரவநல்லூர்: சேரன்மகாதேவியில் ஆர்சி நடுநிலைப்பள்ளி அருகே உள்ள கன்னடியன் கால்வாய் பாலத்தை பொதுமக்களே தற்காலிகமாக சீரமைத்தனர்.நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஆர்சி நடுநிலைப்பள்ளி அருகே கன்னடியன் கால்வாயின் குறுக்கே பொய்லாக் என்ற பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மறுகரையில் புனித மரியன்னை ஆலயம் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. அப்பகுதியை  சுற்றி விளைநிலங்களுக்கு சென்றுவர பொதுமக்கள் இந்த வாய்க்கால் பாலத்தையே பயன்படுத்தி வந்தனர். போதிய பராமரிப்பு இல்லாததால் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் வலுவிழந்து காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் செவிசாய்க்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேரன்மகாதேவி தாலுகா அலுவலகத்தில் கன்னடியன் கால்வாய் விவசாய சங்கத்தினருடன் நடந்த சமாதான கூட்டத்தில் அதிகாரிகள், ஆக.21ல் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறப்பதாக  உறுதியளித்தனர்.

இதனையடுத்து அதிகாரிகளை நம்பி பலனில்லை என்ற முடிவுக்கு வந்த அரசடித்தெரு, சூரப்புரம் தெரு பொதுமக்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து பாலத்தின் தூண்களில் சிமென்ட் கலவையை பூசி தற்காலிமாக சீரமைத்தனர். மேலும்  அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளையும் அப்புறப்படுத்தினர்.

Related Stories: