ஆவின் பால் விலை உயர்வு வாக்களித்த ஏழை மக்கள் மீது தொடுக்கும் கொடூர தாக்குதல்: அதிமுக அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: ஆவின் பால் விலை உயர்வு என்பது வாக்களித்த ஏழை, எளிய மக்கள் மீது அதிமுக அரசு தொடுக்கும் தாக்குதல் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியுள்ளது. இதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): பால் விலை உயர்வு என்பது சாதாரண மக்களுக்கு சிரமம். பால் உற்பத்தியாளர்களும் பயன் அடையவேண்டும். அதே சமயம் நுகர்வோர் மீதும் சுமையை ஏற்றக்கூடாது. அதற்காக அரசு மானியம் கொடுக்கவேண்டும்.பொன்குமார் (தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர்): கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களான அடித்தட்டு மக்களுக்கு பல நேரங்களில் உணவிற்கு மாற்றாக தேனீர், காபி போன்றவை அமைகிறது. ஒவ்வொரு உடலுழைப்பு தொழிலாளியும் தன்னுடைய கடும் உழைப்பிற்கு 4 முதல் 6 டீ வரை ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டியுள்ளது. இந்த பால் விலை உயர்வால் ஏற்படும் டீ, காபி போன்றவற்றின் விலை உயர்வை ஈடுகட்ட தன்னுடைய ஒரு நாள் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை இழக்க வேண்டி நேரிடும். . எனவே இந்த பால் விலை உயர்வால் நேரடியாகப் பாதிக்க கூடியவர்கள் ஏழை, எளிய மக்களும் அமைப்புசாராத் தொழிலாளர்களுமே. அதிமுக ஆட்சியில் மூன்று முறை பாலின் விலை அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ள கொடுமை நேர்ந்துள்ளது. இது அதிமுக அரசு தனக்கு வாக்களித்த ஏழை, எளிய மக்கள் மீது தொடுக்கும் கொடூர தாக்குதலாகும். எனவே அரசு உடனடியாக பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.

நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர்): ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து பால் தொடர்புடைய பொருட்களின் விலையும், தனியார் பால் நிறுவனங்களின் பால் விலையும், உணவகங்களில் டீ, காபியின் விலைகளும் உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பை சந்திப்பார்கள். ஊட்டச்சத்து உணவுகளில் விலை குறைந்த பாலின் மூலம் ஏழைக் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகள் பலனடைந்த நிலையில், இந்த விலை உயர்வு அவர்களை பெரிதும் பாதிக்கும். ஆகவே, தமிழக அரசு ஆவின் பால் விற்பனையை லாபம் தரும் நிறுவனமாக கொண்டு செயல்படுத்தாமல், மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான பால் விற்பனையை சேவையாக கருதி, உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். பால் கொள்முதல் விலையேற்றத்தை அரசே மானியமாக உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Related Stories: