3 ஏரிகளில் பணிகள் தொடங்குவது எப்போது? சோழவரம் ஏரியில் தூர்வாரும் பணி தொடங்கியது

* 13 ஆயிரம் லோடு மண் விற்பனை * 1 கோடி வருவாய்

சென்னை: சோழவரம் ஏரி தூர்வாரும் பணி தொடங்கியுள்ள நிலையில், 13 ஆயிரம் லோடு மண்விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1 கோடி வரை வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிகளில் 150 ஆண்டுகளாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஏரியில் 40 சதவீதம் கொள்ளளவு மண் படிமங்களாக காணப்படுகிறது. இதனால், ஏரிகளில் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் முழு நீரையும் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஏரிகளை தூர்வாரி, அதன் மூலம் 2 டிஎம்சி நீரை சேமித்து வைக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்காக, தமிழக அரசு சார்பில் கடந்தாண்டு நவம்பர் 22ம் தேதி நிதி ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டது. தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்த நிறுவனங்கள் சார்பில் சுற்றுச்சுவர்களை பலப்படுத்துதல், வெள்ள அபாய தடுப்புச்சுவர், பலவீனமான கரைகளை பலப்படுத்துவது, ஏரியில் சாலை அமைத்தல், கைப்பிடி சுவர் அமைப்பது உள்ளிட்ட பல பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் சோழவரம் ஏரியில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 13 ஆயிரம் லோடுகள் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1 கோடியே 11 ஆயிரம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்ற 3 ஏரிகளிலும் தூர்வாரும் பணி தற்போது வரை தொடங்கப்படவில்லை. பூண்டி ஏரியில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புழல்ஏரியில் தூர்வாரும் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனம் அதற்கான தொகை செலுத்தியவுடன் மண் அள்ளுவதற்கு அனுமதிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மண்படிமங்கள் ெகாள்ளளவு பாதிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக ஆய்வு பணி நடந்து வருகிறது. இப்பணிகள் இந்த வாரத்திற்குள் முடிவடைந்து விடும். இதை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.முதற்கட்டமாக 15 ஆயிரம் லோடு மணல் வரை அள்ளப்படுகிறது. இதற்காக, ஒப்பந்த நிறுவனத்திடம் முன்கூட்டியே, அதற்கான தொகை வசூல் செய்யப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: