திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதில் தாமதம் கடந்த 3 ஆண்டுகளில் அரசுக்கு 250 கோடி இழப்பு

* பரபரப்பு தகவல்கள் அம்பலம் * பொதுப்பணித்துறை அலட்சியமே காரணம்

சென்னை: திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது அம்பலமாகியுள்ளது.தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கான கட்டிடங்களை கட்டுதல் மற்றும் கட்டிடங்களின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.900 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு உடனடியாக டெண்டர் விட்டு கட்டுமான பணிகளை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், திட்டமதிப்பீடு தயாரிப்பது, டெண்டர் விடுவது, திட்டப் பணிகளை விரைந்து முடிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டுமான பணிகளை முடிப்பதில்லை.

இதன் காரணமாக திட்டப்பணிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. குறிப்பாக, கடந்த 2014ல் ஹூமாயூன் மகால் திட்ட அறிக்கை தயாரிக்கும் போது ரூ.14 கோடியாக இருந்த நிலையில் தற்போது பணி தொடங்க ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று கல்சா மகால் புனரமைப்பு பணிக்கு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் பணி முடியும் போது ரூ.19 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. அரசு விருந்தினர் இல்ல கட்டுமான பணிக்கு ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் பணி முடிக்கும்போது ரூ.25 கோடி ஆக செலவு ஏற்பட்டது. பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் ரூ.2 கோடி என்ற நிலையில் ரூ.20 கோடி ஆகியுள்ளது. இதேபோன்று சார்பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கால்நடை மருந்தக கட்டிடங்கள், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நல விடுதி கட்டிடங்கள், பள்ளிகளில் வகுப்பறைகள், கழிவறைகள், ஆய்வகம் கட்டுவது, பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சுவர் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காமல் இழுத்தடித்ததன் காரணமாக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.250 கோடி வரை அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து இருக்கும் பட்சத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று மூத்த பொறியாளர்கள் சிலர் தெரிவித்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறும் போது, ‘பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தவுடன் உடனடியாக டெண்டர் விட்டு பணிகள் தொடங்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு தொடங்கப்படும் பணிகள் பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படுவதில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் கட்டுமான செலவை காரணம் காட்டி திட்ட செலவு அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவ்வாறு திட்ட செலவை அதிகரிக்கா விட்டால் கட்டுமான நிறுவனங்களும் பணிகளை மேற்கொள்ளாமல் நிறுத்தி விடுகிறது. இதனால், கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது’ என்றனர்.

Related Stories: