அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்தின் நீரால் நிரப்ப வேண்டாம்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை, பொற்றாமரை குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட  நீரால் நிரப்ப வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள குளத்தை தூர்வாரக் கோரி அசோகன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு  நீதிபதி ஆதிகேசவலு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் காஞ்சிபுர மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ் ஒரு அறிக்கையை தாக்கல் செயாதார். அதில், அனந்தசரஸ் குளம், பொற்றாமரை குளம் மற்றும் கோயிலில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உள்ள நீரை சேகரித்து ஆய்வு செய்ததில், நீரின் கடினத்தன்மை, அமிலத்தன்மை, என அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உள்ளது. குடிநீருக்கு இணையான தரம் கொண்ட நீராக உள்ளது. ஆனால், பொற்றாமரை குளத்தின் நீர் மட்டும் இளம் பச்சை நிறத்தில் மாறி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

 அப்போது, மழை நீரால் அனந்தசரஸ் குளம் நிரம்பாவிட்டால், கோயிலில் உள்ள ஆழ்துளை கிணற்று  நீரை கொண்டு அனந்தசரஸ் குளம் நிரப்பப்படும் என்று அறநிலைய துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, பொற்றாமரை குளத்தின் நீரை, அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் நிரப்ப வேண்டாம் என்று நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், இது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: