3 லிட்டர் வாங்குகிறவர்களுக்கு 1 லிட்டர் மட்டுமே ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் 75% குறைப்பு: பயனாளிகள் கடும் அவதி

சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் இந்த மாதத்தில் இருந்து திடீரென 75 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதால் பயனாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் 3 லிட்டர் மண்ணெண்ணெய் பெற்று வந்தவர்களுக்கு இந்த மாதம் ஒரு லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஒவ்வொரு மாதமும் பொதுமக்களுக்கு 20 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் சர்க்கரை, உளுத்தம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, சிலிண்டரே இல்லாத குடும்பங்களுக்கு மாதம் 6 லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு சிலிண்டர் மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் மண்ெணண்ணெய் 13 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதே மண்ணெண்ணெய் தனியார் கடைகளில் ரூ.40 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.மத்திய அரசு தமிழக அரசுக்கு மண்ணெண்ணெய் மானியத்தை குறைத்துவிட்டதால் கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் அனைவருக்கும் சரிவர மண்ெணண்ணெய் வழங்கப்படுவதில்லை. ஆனாலும் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு கடந்த மாதம் வரை 50 சதவீதம் மண்ணெண்ணெய் சப்ளை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த மாதம் திடீரென 75 சதவீதம் குறைக்கப்பட்டு 25 சதவீதம் மட்டுமே தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் சப்ளை செய்து வருகிறது.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, “சென்னையில் ஒரு ரேஷன் கடையில் 1000 ரேஷன் கார்டுகள் இருந்தால் இதில் 70 சதவீதம் பேர் அதாவது 700 கார்டுதாரர்களிடம் ஒரு சிலிண்டர் மட்டுமே உள்ளது. இவர்களுக்கு மாதம் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு உணவு வழங்கல் துறை சார்பில் 40 சதவீதம் அல்லது 50 சதவீதம் ஒதுக்கீடே வழங்கி வந்தது. இந்த மாதம் 25 சதவீதம் மட்டுமே மண்ணெண்ணெய் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து கடைகளுக்கும் வாய்மொழி உத்தரவு மூலம் இதை அரசு வழங்கியுள்ளது. புகாருக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஒரு கடைக்கு 1000 லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது என்றால் 300 லிட்டர் மட்டும் அரசு தந்துள்ளது. இதனால் மாதத்தின் முதல் நாள் வருகிறவர்களுக்கு கூட மண்ணெண்ணெய் வழங்க முடியவில்லை. ஒரு குடும்பத்திற்கு ஒன்று அல்லது இரண்டு லிட்டர்தான் வழங்கி வருகிறோம். இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது. அரசே, இவ்வளவுதான் மண்ணெண்ணெய் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி உள்ளோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது. இனியாவது அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: