×

‘‘அய்யா நான் குடிக்கவேயில்ல.. பிடிச்சிட்டாங்க..’’ இன்ஸ்பெக்டர் வாகனத்தின் மைக்கில் போதையில் பேசிய இன்ஜினியர் கைது: சென்னையில் நள்ளிரவு பரபரப்பு

சென்னை: குடிபோதையில் இன்ஸ்பெக்டர் வாகனத்தில் இருந்த மைக்கை எடுத்து, இன்ஜினியர் ஒருவர் ‘அய்யா நான் குடிக்கவேயில்லை... என்னை பிடிச்சிட்டாங்க’ என்று கதறி அழுதார். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாநகரம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் வகையில் போலீசார் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ராயலா நகர் இன்ஸ்பெக்டர் சாம்சன் சேவியர் ேநற்று முன்தினம் இரவு தனது வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே வாலிபர்கள் இரண்டு பேர் குடிபோதையில் பைக் ஓட்ட முடியாமல் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த இன்ஸ்பெக்டர் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அஜித்குமார் (22) என்றும், மற்றொருவர் கேரள மாநிலத்தை சேர்ந்த வருண்ராஜ் (26) என்றும், இருவரும் வளசரவாக்கம் ஏழுமலை தெருவில் வாடகை வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது. இன்ஜினியரான இருவரும் போரூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இருவரும் மது அருந்திவிட்டு அறைக்கு செல்ல முடியாமல் போதையில் சர்ச் அருகே நின்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் இருவரையும் பிடித்து தனது வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார். அப்போது, வருண்ராஜ் போதையில் இன்ஸ்பெக்டர் வாகனத்தில் இருந்த மைக்கை எடுத்து ‘அய்யா நான் குடிக்கவே இல்லை.... என்னை விட்டுவிடுங்கள்... போலீசார் என்னை பிடித்துக்கொண்டு வந்துட்டாங்க’.... என்று கூறி கதறி அழுதார். இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர் போதை ஆசாமியிடம் இருந்து மைக்கை பிடுங்கினார். பொதுவாக, இன்ஸ்பெக்டர் வாகனத்தில் உள்ள மைக் சென்னை முழுவதும் உள்ள இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் நேரடி இணைப்பில் இருக்கும். போதை ஆசாமி பேசியதை இரவு பணியில் இருந்த உயர் அதிகாரிகளும் கேட்டதாக கூறப்படுகிறது.பின்னர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர், இன்ஜினியர் வருண்ராஜ் மீது புகார் அளித்தார். அதன்படி போலீசார் சட்டப்பிரிவு 75 கீழ் வழக்கு பதிவு செய்து, கடுமையாக எச்சரித்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அதேபோல், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அஜித்குமார் மீதும் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : drink,engineer, arrested ,Mike
× RELATED உதகையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 380...