தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் நீக்கப்பட்ட நிர்வாகிகளை அதிமுக விசாரணை குழுவினர் நேரில் அழைத்து விசாரணை

சென்னை: தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் கூண்டோடு நீக்கப்பட்ட நிர்வாகிகளை அதிமுக விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், வேலுமணி, தங்கமணி ஆகியோர் அழைத்து நேரில் விசாரணை நடத்தினர். அவர்கள் மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா மீது சரமாரி புகார் கூறினர். இதையடுத்து, பதவி பறிபோனவர்களுக்கு மீண்டும் பதவி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.பி.கலைராஜன் டிடிவி.தினகரன் அணிக்கு சென்றார். இதையடுத்து, அந்த பதவிக்கு தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா நியமிக்கப்பட்டார். இதையடுத்து 3 பகுதி செயலாளர்கள், 43 வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட சுமார் 400 நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் சத்யா பரிந்துரையின் பேரில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதிரடியாக நீக்கினர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அண்ணாதுரை என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டமும் நடத்த முயன்றனர். அப்போது மூத்த நிர்வாகிகள், ‘வேலூர் இடைத்தேர்தல் முடிந்ததும் இப்பிரச்னை குறித்து பேசப்படும்’ என்று கூறி சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்னரும் இந்த விவகாரம் குறித்து யாரும் பேச மறுத்ததால், மீண்டும் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இப்படி நாளுக்கு நாள் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்தது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் அதிமுக விசாரணை குழுவிடம் இந்த விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்தனர். கட்சி பிரச்னைகளை விசாரிக்க கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், நந்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, நீக்கப்பட்ட நிர்வாகிகளிடம் நேற்று காலை மற்றும் மாலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு தேனாம்பேட்டை, அண்ணாநகர், தி.நகர், ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சின்னையா, முகமதுஅலி ஜின்னா, வக்கீல் டி.விஜயராமகிருஷ்ணன், ராஜ்குமார், வி.அண்ணாதுரை, வி.பிரபு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் நேரில் பங்கேற்றனர். அவர்கள் கட்சி அலுவலகத்துக்குள் சென்றதும் கட்சி அலுவலகம் பூட்டப்பட்டது. பின்னர் அவர்கள் ஒவ்வொருவரிடமும் விசாரணை நடந்தது. விசாரணை குழுவினரிடம், பாதிக்கப்பட்டவர்கள் வாய்மொழியாகவும், மனுவாகவும் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான தி.நகர் சத்யா மீது புகார் அளித்தனர்.

புகார் மனுவில், “பல ஆண்டு காலமாக அதிமுக கட்சிக்காக வேலை செய்துள்ளோம். ஆனால் மாவட்ட செயலாளராக வந்த தி.நகர் சத்யா, அவரது ஆதரவாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பதவி வழங்கியுள்ளார். எங்களை எந்த காரணமும் இல்லாமல் உள்நோக்கத்தோடு கட்சியில் இருந்து ஒதுக்கி விட்டார். கட்சி தலைமையும் எங்களிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் நடவடிக்கை எடுத்துள்ளது” தெரிவித்தனர். அனைவரின் புகாரையும் கேட்டுக் கொண்ட விசாரணை குழுவினர், “இந்த புகார் குறித்து மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யாவிடமும் நாங்கள் விசாரணை நடத்துவோம். இதையடுத்து இரு தரப்பும் பாதிக்காத வகையில் சுமுகமான முடிவு எடுக்கப்படும். அதிமுக கட்சி பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்துள்ளனர்.

Related Stories: