விபத்தில் சிக்கிய விமானத்தின் பாகங்கள் 51 ஆண்டுக்கு பின் மீட்பு

சண்டிகர்: இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 1968ம் ஆண்டு விபத்துக்குள்ளான விமானப் படைக்கு சொந்தமான விமானத்தின் பாகங்கள் டாக்கா பனிப்பாறை பகுதியில் இருந்து கண்ெடடுக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-12 பிஎல்-534 விமானம் கடந்த 1968ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி சண்டிகரில் இருந்து லே பகுதிக்கு சென்றது. ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானி பயணத்தில் மாற்றம் செய்தபோது குல்லு மாவட்டத்தில் ரோடாங் அருகே விமானம் மாயமானது. பல்வேறு தேடுதல் பணிகளுக்கு பின்னர் இந்த விமானம் விபத்துக்குள்ளானது என்றும், அதில் இருந்த வீரர்கள் உயிரிழந்தனர் என்றும் உறுதி செய்யப்பட்டது.

ஆனால், விமானத்தின் இருந்த வீரர்களின் சடலங்களை மீட்க முடியவில்லை. இமாச்சலப் பிரதேச மலையில் பனிப்பாறையில் விபத்து ஏற்பட்டதால் இறந்தவர்களின் சடலங்களை மீட்பது சவாலாக அமைந்தது. பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் இந்த பணி கைவிடப்பட்டது. இந்நிலையில் ராணுவத்தின் மலையேற்ற வீரர்கள் குழுவினர், இந்த விமான விபத்தில் சிக்கியவர்களின் உடல் பாகங்களை மீட்கும் முயற்சியை கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கினார்கள். பனிமலையில் 5,240 மீட்டர் உயரத்தில் தேடுதல் பணியில் இந்த குழுவினர் ஈடுபட்டனர். கடந்த 6ம் தேதி முதல் விமானப் படை வீரர்களும் இந்த பணியில் இணைந்தனர். டாக்கா பனிப்பாறை பகுதியில் 13 நாட்கள் தொடர்ந்த தேடுதல் பணிக்கு பின்னர் ஏஎன்-12 பிஎல்-534 விமானத்தின் உடைந்த பாகங்கள், விமான இன்ஜின், வீரர்களின் உடல் பாகங்கள், விமானத்தின் இறக்கை, எரிபொருள் டேங்க், விமானியின் அறை கதவு உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. எதிர்க்காலத்தில் பயன்படும் வகையில் விமான பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள், தேடுதல் பணி நடந்த இடங்கள் உள்ளிட்டவை வரைபடமாக்கப்பட்டது.

Related Stories: