×

மோடி பிரதமரான பின்னரே வளர்ச்சி என்பது தவறு : ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேச்சு

ஜெய்ப்பூர்: `‘மோடி பிரதமரான பின்னரே நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டது என்று கூறுவது தவறு’’ என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய திட்டங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய இம்மாநில முதல்வர் அசோக் கெலாட், நாட்டின் வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜவகர்லால் நேரு. இதற்கான காங்கிரஸ் அரசின் பங்களிப்பு மிகப்பெரியது. கடந்த பல ஆண்டுகளாக நாட்டின் ஜனநாயகத்தை காங்கிரஸ் அரசு வலுப்படுத்தி வந்துள்ளது. அதனால்தான் மோடி கூட பிரதமராக முடிந்தது’’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தற்போது மொபைல் போன் மூலம் பல ஆப்களை தரவிறக்கம் செய்து ரயில், பேருந்து, விமானம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டை பதிவு செய்ய முடிகிறது. முன்போல், மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. உலகில் என்ன நடக்கிறது என்பதை கண் கூடாக காண முடிகிறது. குறுகிய நேரத்தில் யாரையும் தொடர்புக் கொள்ள முடியும். இவை அனைத்தும் ஒரேநாளில் நிகழ்ந்து விடவில்லை. மகாத்மா காந்தி அகிம்சையை கற்று கொடுத்தார். பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து விடுதலை பெற்று தந்தார். அகிம்சையை கடைபிடிக்கும் நாட்டில் தற்போது வன்முறை தலைவிரித்தாடுகிறது. இளைய தலைமுறையினர் தொலைநோக்குடைய தலைவர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று கூறினார்.

Tags : Rajasthan Chief Minister Ashok Khelad, talks
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...