×

ஐதராபாத்தில் நட்டாவுடன் திடீர் சந்திப்பு தெலுங்கு தேசம் முன்னாள் அமைச்சர் பாஜவில் தஞ்சம்?

திருமலை: தெலுங்கு தேசம் முன்னாள் அமைச்சர் ஆதிநாராயண ரெட்டி, பாஜ.வில் சேரப்போவதாக கூறப்படுகிறது.ஆந்திராவின் ஜம்மலமடுகு தொகுதியில் மூன்று முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் ஆதிநாராயண ரெட்டி. 2014ம் ஆண்டு தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜம்மலமடுகு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அமைச்சராக பதவி வகித்தார்.
இதையடுத்து இந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜம்மலமடுகு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக ஆதிநாராயண ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியில் வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படாமல் முன்னாள் அமைச்சர் ராமசுப்பா ரெட்டிக்கு வழங்கப்பட்டது. ஆதிநாராயண ரெட்டிக்கு கடப்பா தொகுதி எம்பியாக தெலுங்கு தேசம் கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அவினாஷ் ரெட்டியிடம் தோல்வியை தழுவினார்.

இதற்கிடையே, தேர்தலுக்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சியின் செயல்பாட்டில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த ஆதிநாராயண ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்பியாக இருந்து பாஜவில் இணைந்த சி.எம்.ரமேஷ் மூலமாக பாஜவில் இணைய முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஐதராபாத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்த பாஜ தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை ஆதிநாராயண ரெட்டி சந்தித்து பேசினார். இது. ஆதிநாராயண ரெட்டி பாஜவில் இணைவதை உறுதி செய்திருப்பதாகவும், அதிகாரப்பூர்வமாக இணைவது குறித்த அறிவிப்பு விரைவில் தெரியவரும் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Sudden encounter,Natta in Hyderabad
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்