ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் காலதாமதம் செய்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

* பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி : ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இவ்வளவு கால தாமதம் கழித்து அப்பீல் வந்ததற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், சார்ந்த துறை அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே அய்யம்பாளையத்தில் குட்டிக்கரடு மலைப்பகுதி உள்ளது. இங்கு அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அப்பகுதியை சேர்ந்த முரளிதரனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் விசாரணையில், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு உதவி செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதை தொடர்ந்து, அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி கடந்த 2012ம் ஆண்டே அதனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து மேற்கண்ட வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த விவகாரத்தில் ஐ.பெரியசாமிக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் அமர்வில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா வாதத்தில், “முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த விவகாரத்தில் ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை, அதில் முகாந்திரம் இல்லை எனக்கூறி ரத்து செய்து விட்டது. இதில் அனைத்து ஆதாரங்களையும் பெற்ற பின்னர் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனால் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து அதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள, “இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கி சுமார் மூன்றரை ஆண்டுகள் கழித்துதான் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இதற்கான காரணம் என்ன?. மேலும் இதில் காலதாமதம் செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஒருவேளை துறை ரீதியாகவோ அல்லது அரசு தரப்பிலோ ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால் அதனை பிரமாண பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். அதன் பின்னர் நாங்கள் விசாரணை மேற்கொள்கிறோம்’’ என தெரிவித்து வழக்கை அடுத்த தேதி எதுவும் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories: