×

முறையாக தூர்வாரப்படாததால் அவலம்: கல்லணை திறந்தும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை...விவசாயிகள் வேதனை

அறந்தாங்கி: காவிரியில் வரும் தண்ணீரை தடுத்து, டெல்டா மாவட்ட பாசனத்திற்கு பயன்படுத்தவும், வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை பாதுகாக்கவும் தஞ்சையை ஆண்ட கரிகால்சோழன் காலத்தில் கல்லணை கட்டப்பட்டது. கல்லணையில்  தேக்கி வைக்கப்படும் நீர் காவிரி, வெண்ணாறு வழியாக சென்று தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாசன வசதி அளிக்கிறது. மேலும், கல்லணைக்கு வரும் உபரிநீர் கொள்ளிடத்தில்  திறந்துவிடப்படும். இவ்வாறு உபரிநீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலப்பதை விரும்பாத ஆங்கிலேயே பொறியாளர் எல்லீஸ் கடந்த 1920ம் ஆண்டு கல்லணையில் இருந்து புதிதாக வாய்க்காலை வெட்டத்தொடங்கினார். இதுதான் தற்போதைய  கல்லணை கால்வாயாகும்.

கல்லணையில் இருந்து 148.76 கிமீ தூரத்தில் உள்ள மும்பாலை வரை உள்ள கல்லணைக் கால்வாய் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கல்லணைக்  கால்வாயை முறையாக பராமரிக்காததால் பல இடங்களில் மணல் திட்டுகள், வாய்க்காலின் மையத்தில் நாணல் செடிகள், நெய்வேலி காட்டாமணக்கு செடிகள் மண்டியுள்ளதால் கல்லணையில் இருந்து 4,500 கனஅடி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக  பொதுப்பணித்துறையினர் 3000 கன அடிக்கும் குறைவாக தண்ணீர் திறக்கின்றனர். இதனால் கடைமடைக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் கல்லணை திறக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து கல்லணைக் கால்வாயில்  500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதே அளவு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டால் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேராது. சுமார் 3500 கனஅடி வரை தண்ணீர் திறந்தால்தான் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரும். இல்லை என்றால் 2.23 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும்  என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க செயலாளர் சுப்பையா கூறியதாவது: கல்லணை கால்வாயை தூர்வார ரூ.6 கோடி நிதி  ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதிக மணல் திட்டுக்கள் உள்ள கல்விராயன்பேட்டை, வெட்டிக்காடு, ஈச்சங்காடு பகுதிகளில் தூர்வாராமல் பெயரளவில் சில இடங்களில் தூர்வாருகின்றனர். தமிழக அரசு புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட  விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கல்லணைக் கால்வாயில் உள்ள மணல் திட்டுக்கள் மற்றும் நாணல் செடிகளை தூர்வாரி தினமும் 4,500 கனஅடியும், நாகுடி தலைப்பிற்கு 300 கன அடியும் முறை வைக்காமல் தண்ணீர் திறக்க  வேண்டும் என்றார்.

Tags : Due to lack of proper insulation: The tomb is open and the water is not coming ... the agony of the farmers
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்