வேலூர், திருவண்ணாமலையில் கனமழை... சிறுமிகள் உள்பட 3 பேர் பரிதாப பலி

அணைக்கட்டு: வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த மழைக்காரணமாக சிறுமிகள் உள்பட பரிதாபமாக இறந்தனர். மேலும் 1000 கோழிகளும் இறந்துள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த கே.ஜி.ஏரியூர் கிராமம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(37). இவரது மனைவி பா. இவர்களது மகள்கள் ஹரிணி(6), பிரித்திகா(3). மற்றும் 3 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வேல்முருகனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தோண்டப்படிருந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. நேற்று விவசாய நிலத்தில் ஹரிணியும், பிரித்திகாவும் பள்ளம் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் தவறி பள்ளத்தில் விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் சண்முகசுந்தரம், நேற்று சிறுமிகளின் வீட்டுக்கு சென்று அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை(35), விவசாயி. கண்பார்வை குறைபாடு உள்ளவர். தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே சென்றபோது மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய அண்ணாமலை சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த மங்கலம் போலீசார், சடலத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

கோழிகள்

ஆம்பூரில் பெய்த கனமழை காரணமாக மேல் மிட்டாளத்தை சேர்ந்த யுவராஜ்(45) என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வெள்ளம் புகுந்தது. இதனால், அங்கிருந்த சுமார் 1000 கோழிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தன.

Related Stories: