வேலூர் சேண்பாக்கத்தில் பல்லாங்குழியான சாலை: பல மாதங்களாக சீரமைக்காத அவலம்

வேலூர்: வேலூர் சேண்பாக்கத்தில் குடிநீர் பைப் அமைக்க தோண்டப்பட்ட சாலை பல மாதங்களாகியும் சீரமைக்காததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் பல பகுதிகளில் குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி பல மாதங்களுக்கு முன் நடந்தது. இதற்காக பிரதான சாலைகள், தெருக்கள் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இதையடுத்து பைப்லைன்கள் அமைக்கப்பட்டது. ஆனால் இப்பணிகள் முடிந்து பல மாதங்களுக்கு மேலாகியும் சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் சாலைகள், தெருக்கள் எல்லாம் குண்டும், குழியாக மாறிவிட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மாநகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழல் உள்ளது. சேண்பாக்கம் பகுதியிலும் இந்த நிலை உள்ளது. இங்கு 6 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை புதிய சாலை அமைக்கவில்லை. பள்ளங்கள் கூட சரியாக மூடப்படவில்லை.

இதனால் தற்போது சேண்பாக்கம் முழுவதும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது. இந்த சாலையில் நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் வாகனஙகள் செல்வது சவாலாகவே உள்ளது. சாலைகள் முழுவதும் குண்டும், குழியாக இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து செல்கின்றனர். இன்று காலை ஒரு மாணவி, தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். ஒரு பள்ளத்தில் பைக் இறங்கியபோது மாணவி தோளில் மாட்டியிருந்த பை அறுந்து புத்தகங்கள் பள்ளத்தில் தேங்கியுள்ள சேற்று தண்ணீரில் விழுந்து சேதமானது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Related Stories: