இந்தியாவிற்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையை தூண்டுகின்றன: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அதை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு சமீபத்தில் பிரித்தது. இதற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இப்பிரச்னையை சர்வதேச அரங்கில் கிளப்ப முயற்சி மேற்கொண்டது. இதற்காக காஷ்மீர் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங்கிடம்,  பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மகமூத் குரேஷி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார். காஷ்மீர் விவகாரத்தில் நீதி கிடைக்க சீனா துணை நிற்கும் என குரேஷியிடம் வாங் தெரிவித்தார். மேலும், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசர  கூட்டத்தை கூட்ட வேண்டும் என அதன் தலைவரும், போலந்து ஐ.நா தூதருமான ஜோனா ரோனெக்காவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற வகையில், மூடிய அறைக்குள் கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என சீனா கூறியது. இதனை ஏற்று கடந்த 16-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, நடந்த பாதுகாப்பு கவுன்சில்  கூட்டத்தில் இப்பிரச்னை பற்றி பேசப்பட்டது. ஆனால், அதில் சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததாகவும், மற்ற நாடுகள் அதை நிராகரித்ததோடு, இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறி இந்தியாவுக்கு ஆதரவு  தெரிவித்தன. இதனால் இப்பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.

இதற்கிடையே, கடந்த 16-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ‘காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானின்  கவலையை வெளியிட்ட அவர், இந்த நடவடிக்கை பிராந்திய அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கும்’ என்றும் கூறினார். இந்த உரையாடலின் போது, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தால் இருநாடுகளுக்கும் இடையே  ஏற்பட்டுள்ள பதற்றத்தை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகையின் ஊடக துணை செயலர் ஹோகன் கிட்லி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். ஐநா பாதுகாப்பு  கவுன்சிலில், காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடைபெறும் முன் இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், ஐநா கூட்டம் முடிந்த பிறகே, இந்த தகவல் வெள்ளை மாளிகை வெளியிட்டது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது, இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேசினார். இரு தரப்பு வர்த்தகம்  தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். மேலும், இந்தியாவிற்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையை தூண்டுவதாகவும், வன்முறையை தூண்டிவிடுவது பிராந்திய  அமைதிக்கு உகந்ததல்ல என்று ட்ரம்பிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Related Stories: