உலக நாடுகள் ஆவலுடன் எதிர்நோக்கும் சந்திரயான் நிலவில் இறங்கும் அந்த 15 நிமிடத்திற்காக காத்திருக்கிறோம்... விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

மேட்டுப்பாளையம்: உலக நாடுகள் ஆவலுடன் எதிர்நோக்கும் சந்திரயான் 2 நிலவில் இறங்கும் அந்த 15 நிமிடங்களுக்காக காத்திருக்கிறோம் என சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மத்திய அரசின் ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்ற மாணவி சபீதாவுக்கு பாராட்டு விழா மற்றும் 10ம் வகுப்பில் தொடர்ச்சியாக ஏழு முறை 100 சதவீத தேர்ச்சியும், பன்னிரண்டாம் வகுப்பில் 9 முறை தொடர்ச்சியாக 100 சதவீத தேர்ச்சி பெற காரணமான ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா நடந்தது.

Advertising
Advertising

இதில் சிறப்பு அழைப்பாளராக சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குநரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: செப்.7ம் தேதியை இந்தியாவின் 130 கோடி மக்களும், நிலவிற்கு திரும்பவும் செல்ல வேண்டும் என நினைக்கும் உலக நாடுகளும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றன. நிலவை நோக்கி செல்லும் சந்திரயான்-2 நிலவின் நீள்வட்டப்பாதையை ஈர்ப்பு விசையுடன் அடையும். அதன்பின், விக்ரம் பிரக்யான் களங்கள் அதில் இருந்து விலகி மெதுவாக செப்.7ல் நிலவை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தொழில்நுட்ப ரீதியாக சவாலான காரியமாக இருந்தாலும் அனைத்து சோதனைகளும் முடிவடைந்துள்ளது. சந்திரயான் நிலவில் இறங்கும் அந்த 15 நிமிடத்திற்காக காத்திருக்கிறோம். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

Related Stories: