×

இடப்பற்றாக்குறையால் தினமும் அவதி... மேலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் வேண்டும்... வக்கீல்கள், பொதுமக்கள் கோரிக்கை

மேலூர்: இடப்பற்றாக்குறையால் நிற்கக்கூட இடமில்லாமல் மேலூர் கோர்ட்டிற்கு வரும் பொதுமக்களும், வக்கீல்களும் அவதிப்பட்டு வருவதால் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில் சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் என 3 நீதிமன்றங்கள் உள்ளன. இதில் குற்றவியல் நீதிமன்றம் தனியாகவும், மற்ற 2 இரு நீதிமன்றங்கள் ஒரே கட்டிடத்திலும் செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்று நீதிமன்ற கட்டிடங்களும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்கள். மக்கள் பெருக்கம் மற்றும் குற்ற சம்பவங்கள் பெருக்கத்திற்கு பிறகு இந்த நீதிமன்ற கட்டிடங்கள் போதுமானதாக இல்லை. கடந்த 10 வருடமாக கேம்ப் கோர்ட்டாக செயல்பட்டு வந்த மேலூர் சார்பு நீதிமன்றம் கடந்த 4 மாதத்திற்கு முன்பு நிரந்தர சார்பு நீதிமன்றமாக மாற்றப்பட்டது.

இதனால் இங்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, ஓய்வறை என எதுவும் இல்லை. இதே நிலை தான் குற்றவியல் கோர்ட்டிலும் உள்ளது. மேலூரில் உள்ள 3 கோர்ட்களை ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை கட்ட அரசு முன்வர வேண்டும். அப்படி கட்டினால் பொதுமக்கள், வக்கீல்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள். உடனடியாக புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை கட்ட வேண்டும் என மேலூர் பகுதி மக்கள், வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மேலூர் வக்கீல் சங்க முன்னாள் தலைவர் ஜெயராமன் கூறுகையில், ‘இதுவரை பகுதிநேரமாக செயல்பட்ட சார்பு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27 முதல் நிரந்தர நீதிமன்றமாக மாறிவிட்டது. இதற்கென தனி இடம் இல்லாததால் பழைய நீதிமன்ற கட்டிடத்தின் ஓர் அறையில் செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட வழக்காடிகள் கூடுகின்றனர். இவர்களுக்கு உட்கார போதிய இடம் இல்லை. நீதிபதி அழைக்கும் போது வழக்காடிகள் உடனடியாக அந்த கூட்டத்தை கடந்து வந்து சேர முடிவதில்லை. அதே போல் பெண்களுக்கு என கழிப்பறை, ஓய்வறை என எதுவும் கிடையாது. மேலூரில் உள்ள 3 நீதிமன்றங்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத்தை கட்ட அரசு நிதி ஒதுக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் மிகுந்த பயன் பெறுவார்கள்’ என்றார்.

Tags : Court
× RELATED முல்லைப் பெரியாறு அணை வழக்கு...