×

மேட்டுப்பாளையம் ஏல மையத்தில் நீலகிரி வெள்ளைப்பூண்டு விலை வீழ்ச்சி... விவசாயிகள் அதிர்ச்சி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ஏல மையத்தில் நீலகிரி வெள்ளைப்பூண்டு விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வெள்ளைப்பூண்டு மொத்த வியாபார ஏல மையம் செயல்பட்டு வருகிறது இங்கு நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் விளையும் வெள்ளைப் பூண்டு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளைப்பூண்டு விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது அறுவடை காலம் என்பதால் அதை அறுவடை செய்து விற்பனைக்காக மேட்டுப்பாளையத்தில் செயல்படும் மொத்த ஏல மையத்துக்கு கொண்டு வருகின்றனர். வழக்கமாக நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய வெள்ளைப்பூண்டை அறுவடை காலத்தில் குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் சென்று அங்கு விதைக்கு பயன்படுத்துவார்கள். தற்போது அறுவடை சீசன் என்பதால் நீலகிரியில் விளையக்கூடிய வெள்ளைப்பூண்டுகளை வாங்கிச் செல்ல வடமாநில வியாபாரிகள் வரத்துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் வெள்ளைப் பூண்டு ஒரு கிலோ 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விலை போனது. ஆனால் இந்த வாரம் 200 ரூபாயில் இருந்து 250 ரூபாய் வரை விலை போனதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளை பூண்டு விவசாயம் செய்வதற்கு உரம் பூச்சிக்கொல்லி மருந்து என அதிக அளவு செலவாகும் இந்த ஆண்டு மழை குறைந்த அளவே பெய்ததால் வெள்ளைப்பூண்டு விளைச்சல் வெகுவாக குறைந்தது. இதனால் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில் வெள்ளைப்பூண்டு விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் பாதிக்கபடுவதாகவும், அறுவடை காலங்களில் ஒரே மாதிரியான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவ மழை உரிய நேரத்தில் பெய்யாததால், பூண்டு பயிரிட்டிருந்த விவசாயிகள் அதற்கு அதிக செலவு செய்ய வேண்டி இருந்தது. இந்த நிலையில் இந்த மாதம் பூண்டு அறுவடை காலம் என்பதால் மேட்டுப்பாளையம் சந்தைக்கு அதன் வரத்து அதிகரித்து பூண்டின் விலை குறைந்துள்ளது என்றனர்.

Tags : Mettupalayam, Garlic
× RELATED கர்நாடகாவில் இருந்து...