×

அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரைக் குளத்தில் நீரை கொண்டு நிரப்ப வேண்டாம்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்தின் நீரால் நிரப்ப வேண்டாம் என ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை  நடைபெறும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. ஜூலை 31ம் தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நிறைவுநாளான நேற்று முன்தினம் வரை நின்ற கோலத்தில்  அருள்பாலித்தார்.

இந்த வைபவம் தொடங்கிய நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் ஆர்வத்துடன் அத்தி வரதரை தரிசனம் செய்தனர். நேற்றுமுன்தினம் வரை 1.5 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள்  அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். வைபவம் நிறைவடைந்ததால், வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு அத்திவரதர், அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டது. மீண்டும் 40 ஆண்டுகளுக்கு பிறகுதான் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க  அத்திவரதர் வெளியே வருவார். அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் இறக்கும் நிகழ்வில் பங்கேற்க கோயில் பட்டாச்சாரியர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் என மொத்தம் 253 பேருக்கு மட்டுமே அனுமதி  அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள குளத்தை தூர்வார வலியுறுத்தி அசோகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள  அனந்தசரஸ் குளத்தில் ஆழ்துளைக் கிணற்றின் நீரை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொற்றாமரைக் குளத்தில் உள்ள நீரை அனந்தசரஸ் குளத்தில் நிரப்பக் கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  பொற்றாமரைக் குளத்தின் நீர் இளம்பச்சை நிறத்தில் உள்ளதால் பாசிய படிய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், அத்திவரதர் குளம்  தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Tags : Do not fill Ananthasaras pond with water: EcoReport to Charity Department
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...