முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு: தலைவர்கள் வாழ்த்து

ஜெய்பூர்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வாகியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (86). இவர் அசாம்  மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார். கடந்த 1991ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். மேலும், 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை  பிரதமராக பதவி வகித்தார். இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் கடந்த ஜூன் 14ம் தேதியுடன்  நிறைவடைந்தது.

அசாம் மாநிலத்தில் காங்கிரசுக்கு போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லாததாலும், அங்கு எம்பி பதவி காலியாகாததாலும் மீண்டும் மன்மோகன் சிங்கை மாநிலங்களவைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே, ராஜஸ்தானை சேர்ந்த  பாஜ மாநிலங்களவை உறுப்பினர் மதன் லால் சைனி கடந்த ஜூனில் உயிரிழந்தார். இதனால், ஒரு எம்பி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பதவிக்கு வருகிற 26ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்  ஆணையம் அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடந்த 14-ம் தேதி கடைசி நாளாக இருந்தது. தொடர்ந்து, இந்த எம்பி பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட மன்மோகன் சிங் கடந்த 13-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று பரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. இந்நிலையில், மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வாகியுள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில், அக்கட்சிக்கு  100 எம்எல்ஏக்கள் உள்ளதால் மன்மோகன் வெற்றி வேட்புமனு தாக்கல் செய்தபோதே உறுதியானது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களவை எம்பியாக தேர்வான மன்மோகன் சிங்கிற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் வாழ்த்து  தெரிவித்துள்ளார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Related Stories: