தமிழகத்தில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம்: அதிகாரிகள் மக்களிடம் சென்று நேரடியாக மனுக்களை பெற்றுத் தீர்வு காணும் வகையிலான முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். தமிழகம் முழுவதும் கிராமங்களுக்கும், நகரங்களில் வார்டுவாரியாகவும் சென்று அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டம் வனவாசியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர், மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஒரு குறிப்பிட்ட நாளில் வார்டு வாரியாகச் சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவார்கள் என்று தெரிவித்தார். மனுக்கள் கணினிகளில் பதிவிடப்பட்டு தொடர்புடைய துறைகளுக்கு ஒரு வாரத்துக்குள் அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார். மனுக்களில் உள்ள கோரிக்கைகள் தொடர்பாக ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

மாவட்டங்களில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்பட்டு, சாலைகள், தெரு விளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் 5 லட்சம் தகுதியான முதியோருக்கு புதிதாக ஒய்வு ஊதியம் வழங்கப்படவுள்ளதாகவும், மேட்டூர் உபரிநீரை 565 கோடி ரூபாய் மதிப்பில் 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறினார். எடப்பாடி தொகுதியில் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டதன் மூலம் 234 தொகுதிகளிலும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முதலமைச்சர், இத்திட்டத்திற்காக ஒவ்வொரு வட்டத்துக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 76 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மக்கள் அதிகாரிகளை அணுகுவதை விட அதிகாரிகளே மக்களை நாடி மனுக்களைப் பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். வண்டியின் இரு சக்கரங்களான அரசும் அதிகாரிகளும் சரியாக சென்றால்தான் இலக்கை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் திட்டம் போட்டாலும் அதை நடைமுறைப்படுத்தக் கூடியவர்கள் என்ற வகையில் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுவதாக முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

இதையடுத்து செட்டிமாங்குறிச்சிக்குச் சென்ற முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் அங்குள்ள புது ஏரியை தூர்வாரும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் கொண்டுவந்து நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு திரளாக வந்திருந்த மக்களிடம் முதலமைச்சர் மனுக்களையும் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மேட்டூர் அணை 115 அடியை எட்டிவிட்டதாகவும், விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என்றும் தெரிவித்தார். நாட்டில் மருத்துவமனை வசதி, உட்கட்டமைப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்றார். குடிமராமத்து திட்டத்தில் நடப்பாண்டில் ரூ 500 கோடியில் 1,829  ஏரிகள் தூர்வாரப்பட உள்ளது என்றார்.

Related Stories: