×

நீர்நிலைகள் பராமரிப்பு வழக்கு: தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எந்த தொழில்நுட்ப அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி, உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏராளமான நீர்நிலைகளும், நீர்வழித் தடங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால், போதியளவு தண்ணீரை தேக்க முடியவில்லை. பல  கண்மாய்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. வைகையில் கழிவுகள், கழிவு நீர் கலந்து வருகிறது. ஆகவே, மதுரை மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள், நீர்வழித் தடங்களிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், தூர்வாரி தண்ணீரை  தேக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இதே போல கே.கே.ரமேஷ் என்பவர் தமிழகத்தில் நீர்நிலைகள், குளங்கள் ஆகியவை நாளுக்கு நாள் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகள், வணிகவளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் மழைநீர் சேகரிக்க முடியாமல் நிலத்தடிநீர் படுபாதாளத்துக்கு  சென்றுவிட்டது. எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். இதே கோரிக்கையை முன்வைத்து பலரும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை இன்று விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எந்த தொழில்நுட்ப அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தமிழக தலைமை  செயலாளர் தலைமையில் பொதுப்பணித்துறை செயலாளர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட துணை ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியயோருடன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பிற்குட்பட்ட 13  மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிப்பது மற்றும் அவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆலோசித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் வீரகதிரவனை நியமித்த நீதிபதிகள் அவரும் அந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். திருநெல்வேலியை சேர்ந்த  சுந்தரவேல் என்பவர் தொடர்ந்த வழக்கை செப் 16ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி,திண்டுக்கல், கரூர், திருவாரூர், சிவகங்கை  ஆகிய 13 மாவட்டங்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பின் கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Water Supply Maintenance Case: High Court Madurai Branch to set up a committee headed by Chief Secretary
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்