×

ஒரே இடத்தில் நின்று பறக்கும் தும்பிகள்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

தும்பி என சொல்லப்படும் தட்டாரப்பூச்சி அல்லது தட்டான் (Dragonfly) பூச்சியைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. நீர்நிலைகளுக்கு அருகே காணப்படும் கண்ணைக் கவரும் பூச்சிக் குடும்பங்களில் அழகான, ஒல்லியான, பறக்கும் பூச்சிகளாகும். இப்பூச்சிகளின் உடல் கண்ணைக் கவரும் நிறத்தில் மெல்லிய கம்பி போல் நீண்டு இருக்கும். நான்கு இறக்கைகள் வலைபோலவும் மிகமிக மெல்லிய, கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் படலமாகவும் இருக்கின்றன. இவற்றைக்கொண்டு, மணிக்கு 70 கிமீ முதல் 90 கிமீ வரையிலும் விரைவாக பறக்கும். தட்டான் பூச்சிகளுக்கு இரண்டு பெரிய கூட்டுக் கண்களும் ஆறு கால்களும் உண்டு. கால்களில் மெல்லிய மயிர்போன்ற இழைகள் நெடுகிலும் உண்டு. தட்டாம் பூச்சிகள் மற்ற கொசு போன்ற பிற சிறு பறக்கும் பூச்சிகளையும் பிற சிறு உயிரினங்களையும் உண்டு வாழ்வதால் கொன்றுண்ணி பூச்சிகளில் ஒன்றாகும்.

பெண் தட்டாம்பூச்சி தன்னுடைய சில நூறு முதல் சில ஆயிரம் முட்டைகளை நீரிலோ, நீரருகே உள்ள மண்ணிலோ, நீர்ச்செடிகளிலோ இடுகின்றது. வெப்ப நாடுகளில் உள்ளவை சில நாட்கள் முதல் (5-15 நாட்கள் முதல்) ஒரு மாத அளவிலே பொரிக்கும். குளிர் நாடுகளில் இரண்டு மாதம் முதல் 7 மாதங்கள் வரை கூட ஆகலாம். அந்த முட்டைகளிலிருந்து பிறக்கும் இளவுயிரி தட்டான் நீருக்குள்ளேயே தன் வாழ்க்கையை ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை வாழும். அப்போது இதற்கு இறக்கைகள் இருக்காது. இந்த நிலையிலும் இவற்றுக்கு நல்ல கண்பார்வை உண்டு, பெரிய கீழ்வாய்த்தாடை உண்டு. இவ் இளவுயிரிகள் செவிள்கள் மூலம் மூச்சுவிடுகின்றன.

தட்டான் பூச்சிகள் மற்ற பறக்கும் பூச்சிகள் யாவற்றைக் காட்டிலும் திறன் மிக்கவை. தும்பிகள் பறந்துகொண்டே ஒரே இடத்தில் நிற்கக்கூடிய திறன் கொண்டவை. அது மட்டுமில்லாமல் பறந்துகொண்டே திடீர் என்று 180 பாகை திரும்பி, பின் திசை நோக்கிப் பறக்கவும், முன்னால் பறக்காமல் பின்னோக்கி நகருமாறு பறக்கவும் இயலும். தட்டான் பூச்சிகள் ஆண்டிற்கு 8000 கிமீ தொலைவு பறக்கக்கூடியன என முன்பு அறிஞர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால், பிப்ரவரி 2016ல் PLOS ONE இதழில் வெளியான ஆய்வறிக்கையின்படி 14000 கிமீ முதல் 18000 கி.மீ வரை பறக்கக்கூடியன என தெரியவந்தது.

Tags : Flying tumbling in one place
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...