×

விண்வெளியில் குவியும் குப்பைகள்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

ஒவ்வொரு நாளும் பெருகிவரும் தொழிற்சாலைக் கழிவுகளாலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் கழிவுகளாலும் மனிதன் வாழும் பகுதிகள் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. ஒருபுறம் அப்புறப்படுத்தினாலும் மறுபுறம் மேலும் ஒரு மடங்கு குப்பை குவியத்தான் செய்கிறது. நாம் வாழும் பூமியில்தான் இப்படியென்றால், பூமிக்கு வெளியே சில கி.மீ தூரத்திலேயே பல்வேறு நாடுகளால் அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கிலான சாட்டிலைட் குப்பைகள். இதில் வட்டப்பாதையில் சுற்றிவரும் சாட்டிலைட்டுகள் குறைவு. துப்பாக்கி தோட்டாவை விட பத்து மடங்கு வேகத்தில் சுற்றிவருவது செயலிழந்துபோன 95% செயற்கைக்கோள் குப்பைகள்தான்.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் 1 மி.மீ நீளத்திற்கும் குறைவான 170 மில்லியன் டன் குப்பைகள் பூமியைச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன என்கிறது. இதில் ரஷ்யா, 6,500 விண்கலக் குப்பைகளோடு முதலிடமும், அடுத்து அமெரிக்கா 3,999 பொருட்களோடு இரண்டாம் இடத்திலும் உள்ளன. இவற்றுக்கு அடுத்து விண்வெளித் திட்டங்களோடு களமிறங்கியுள்ள சீனா 3,475 பொருட்களோடு அடுத்த இடம்பிடித்துள்ளது. சீனா 2007 ஆம் ஆண்டு Anti-Satellite weapons test க்காகத் தன் சாட்டிலைட்டை உடைத்தபோது 35,000 குறுந்துண்டுகள் குப்பைகளாக மாறின.

இந்தச் சூழ்நிலையில் இந்தியாவும் சமீபத்தில் Anti-Satellite weapons test நடத்தியது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘தாழ்வான வளிமண்டலத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதால், விண்வெளியில் குப்பைகள் சேராது. உடைந்து சிதறிய செயற்கைக்கோள் குப்பைகள் சில வாரங்களில் பூமியில் வந்து விழும்’’ என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ‘‘விண்வெளிக் குப்பைகள் தங்களது செயற்கைக்கோளுக்கே ஆபத்து என்பதை நாடுகள் உணரத் தாமதமாகிவிட்டது’’ என்கிறார் ஏரோ ஸ்பேஸ் கார்ப்பரேஷனின் விண்வெளி ஆராய்ச்சியாளரான பில் அய்லர்.

Tags : Debris accumulating in space!
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்