×

கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி லாரி ஓட்டுநர் பலி

கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆணைக்கட்டி, மாங்கரை, தடாகம், பள்ளிமடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் லாரி ஓட்டுநரான பன்னிமடை சஞ்சீவிநகரை சேர்ந்த 27 வயது கணேசன் என்பவர் நள்ளிரவில் பணியை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது தீடீரென எதிரே வந்த ஒற்றைக்காட்டு யானை கணேசனை தாக்கி தூக்கி வீசியுள்ளது. இதில் கணேசனுக்கு கால் முறிவு ஏற்பட்டதுடன் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பட்டாசு வெடித்தும்  வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பியும் யானையை அங்கிருந்து விரட்டினர்.

படுகாயமடைந்த கணேசனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து யானை ஊருக்குள் நுழையும் தகவல் தெரிந்தால் உடனடியாக 180042425456 என்ற டோல் பிரீ எண்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களை வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.


Tags : Coimbatore, Single Wild Elephant, Attack, Truck Driving, Kills
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி