வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கடலூர், விழுப்புரம், நாமக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனத்தில் 17 செமீ மழையும், குடியாத்தம் 9 செமீ மழையும், ஆம்பூரில் 12 செமீ மழையும் பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மதுரை விமான நிலையத்தில் 8 செமீ மழையும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டம் வானூரில் 6 செமீ மழை பெய்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை காலத்தில் தமிழகத்தில் தற்போது வரை 8 விழுக்காடு குறைவாகவும் சென்னைக்கு 19 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கநர் புவியரசன் நேற்று பேட்டியளித்தார். தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மேலும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலும் நேற்று மாலை வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: