×

மெடிக்கல் இன்சூரன்ஸ்? இதுதான் check list!

பாலிசி எடுக்கும் முன் நீங்கள் எடுக்கப்போகும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் தன்மை, அதன் கவரேஜ், அது வழங்கப்படும் விதம் ஆகியவற்றை கவனமாகப் பரிசீலனை செய்யுங்கள். ஏனெனில், நிறைய பேர் இதன் விதிகளை கவனமாகப் படிக்காமல் அசட்டையாக இருந்துவிட்டு பின்னர் காப்பீடு கிடைக்கவில்லை என்று வருந்துவார்கள்.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டால் அதில் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் காப்பீடு உள்ளதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு மட்டுமே காப்பீடு வழங்குகின்றன. அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவது இல்லை.

அதேபோல், பணிபுரியும் இடத்தில் மருத்துவக் காப்பீடு இருந்தாலும் உங்களுக்கு எனத் தனிப்பட்ட முறையிலும் மருத்துவக் காப்பீடு செய்துகொள்வது நல்லது. ஏனெனில், சில நிறுவனங்கள் பணியாளர்கள் பணியை விட்டு விலகியதும் பாலிசி நிறைவடையும்படியான திட்டங்களில் இருப்பார்கள். நமக்குத்தான் இந்த வருடம் முழுதும் கவரேஜ் இருக்கிறதே என்று அசட்டையாக இருந்தால் சிக்கல் உங்களுக்குத்தான். சில மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் தளர்வு காலம், காத்திருப்பு காலம் உண்டு. அவற்றைக் கவனமாகப் பரிசீலனை செய்யுங்கள். சிலவகை நோய்களுக்கான பாலிசிகள் காத்திருப்பு காலத்துக்குப் பிறகே செயல்பாட்டுக்கு வரும். உங்களுக்கு அதற்கு முன்பு சிகிச்சை தேவைப்பட்டால் நீங்கள் கைக் காசைத்தான் இழக்க வேண்டியது வரும். எனவே, முன்பே திட்டமிட்டு முதலீடு
செய்யுங்கள்.

சிலவகை பாலிசிகளில் டாக்டர் ஃபீஸ், அறுவைசிகிச்சை செலவு போன்றவை மட்டுமே காப்பீட்டுத் தொகையில் வரும். பெட் சார்ஜ், பரிசோதனை செலவுகள், மருந்துகளுக்கான செலவுகள் போன்றவற்றை நீங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும். எனவே, உங்கள் பாலிசி எந்த எல்லை வரை கவராகும் என்பதை நன்கு புரிந்துவைத்திருங்கள்.ஒன்றுக்கும் மேற்பட்ட மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்கள். அவற்றின் சலுகைகள் என்னென்ன என்பதை நன்கு கவனத்தில் கொண்டிருங்கள். ஒரேவகையான சலுகைகள்தான் இரண்டு பாலிசியிலும் உள்ளன என்றால் அதனால் உங்கள் பணம்தான் வீண். அந்தத் தொகையை ஒரே ப்ரீமியமாகச் செலுத்தினால் உங்களின் கவரேஜ் மேலும் அதிகரிக்கப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரே மாதிரியான மெடிக்கல் இன்ஷூரன்ஸ்களில் திரும்ப திரும்ப முதலீடு செய்யாதீர்கள்.

டெங்கு போன்ற பருவகால நோய்களுக்கான இன்ஷூரன்ஸ்கள் எடுக்கும்போது அதன் கவரேஜ் காலம் எதுவரை உள்ளது நீங்கள் எப்போது எடுக்கப் போகிறீர்கள் என்பதைக் குறித்து விழிப்பாய் இருங்கள். பொதுவாக, டெங்கு போன்றவை மழைக்காலங்களில்தான் வீறுகொண்டு பரவுகின்றன. அந்த குறிப்பிட்ட காலத்தில் உங்கள் பாலிசி செயல் இழந்துவிடுவதாக இருக்கக் கூடாது.

-இளங்கோ கிருஷ்ணன்


Tags : Medical, Insurance,check list
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...