பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்

புதுடெல்லி: பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா வயது (82) இன்று உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். பீகார் மாநிலத்தில் ஜெகநாத் மிஸ்ரா 3 முறை முதல்வர் பதவியை வகித்துள்ளார். பீகாரில் லாலு பிரசாத் யாதவ் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் முன்பாக காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த ஜெகநாத் மிஸ்ரா மாநிலத்தின் மிக வலிமையான தலைவராக விளங்கினார்.

லாலு பிரசாத்தின் அரசியல் எழுச்சிக்கு பிறகு மிஸ்ராவின் அரசியல் வீழ்ச்சியடைந்தது. பின்னர் பீகாரில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்துள்ளன. இவ்வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் தவிர பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் மீது குற்றம் சாட்டப்பட்டு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதில் முதல் 2 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுடன் சேர்த்து ஜெகநாத் மிஸ்ராவுக்கும் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செயயப்பட்டுள்ளன. இந்நிலையில் நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜெகநாத் மிஸ்ரா இன்று டெல்லியில் காலமானார். அவரது மறைவுக்கு டெல்லி முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜெகநாத் மிஸ்ரா மறைவுக்கு 3 நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் உடல் தகனம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் பீகார் அரசு அறிவித்துள்ளது.

Related Stories: