அரிட்டாபட்டி பகுதியில் புதிய வகை பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு

மேலூர்: மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் புதிய வகை பூச்சி இனங்கள் உள்ளதை ஆராய்ச்சி மாணவிகள் கண்டுபிடித்து ஆவணப்படுத்தினர். மேலூர் அருகில் உள்ள அரிட்டாபட்டி பகுதி இயற்கை எழில் கொஞ்சும் பகுதி. 7 மலை தொடர்கள் கொண்ட இப்பகுதியில் அரிய வகை பறவை இனங்கள் பல உள்ளது. இது குறித்து பறவை ஆர்வலர்கள் அவ்வப்போது இங்கு வந்து அப் பறவைகளை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் அரிய வகை பூச்சி இனங்கள் அதிகமாக உள்ளதை அறிந்த மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி ஆராய்ச்சி மாணவிகள் ரம்யா, லாவண்யா அங்கு வந்து முகாமிட்டு தங்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

அப்போது பொன்வண்டு, சாணுரிட்டி வண்டு, வெட்டுக்கிளி வகைகள், கும்பிடு பூச்சி, சிலந்தி வகைகள் என 150க்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள் அங்குள்ளதை கண்டறிந்து அவர்கள் ஆவணப்படுத்தினர். இவர்களுடன் அரிட்டாபட்டி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சங்கீத், கதிரவன் தெற்குதெரு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சஞ்செய், அஜெய் இருந்தனர். இவர்களுக்கு வழிகாட்டியாக பறவைகள் பல்லுயிர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், அரிட்டாபட்டி குடவரை சிவன்கோயில் பூசாரி சிவலிங்கம், அரிட்டாபட்டி ஏழுமலை பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் செயல்பட்டு, உதவி செய்தனர்.

Tags : Aritabatti, a new species of insect, invention
× RELATED பூமியைப் போலவே புதிய கிரகம் கண்டுபிடிப்பு!