×

அடிப்படை வசதிகள் இல்லாத புதுக்கோட்டை ரயில் நிலையம்: உரிய பாதுகாப்பு இல்லாததால் பயணிகள் அச்சம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமலும், பாதுகாப்பும் இல்லாததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு சென்னை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ேபான்ற அதிவிரைவு, சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள் என 24 மணி நேரமும் ரயில்கள் வந்து செல்கின்றன. இதன்மூலம் வெளியூர்களில் இருந்து புதுக்கோட்டைக்கும், புதுக்கோட்டையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளும் தினந்தோறும் புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதேபோல் சரக்கு ரயில்களும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் குகை ஓவியம், திருமயம் கோட்டை, தமிழகத்தின் இரண்டாவது மியூசியம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் இருப்பதால் சுற்றுலாவாசிகள் புதுக்கோட்டை ரயில் நிலையம் வந்து பின்னர் அங்கிருந்து பஸ் ஏறிச் செல்கின்றனர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் பலர் காரைக்குடி, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களும் காலை மாலையில் ரயில் பயணத்தை மேற்கொள்ள புதுக்கோட்டை ரயில் நிலையம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான எந்தவித அடிப்டை வசதிகளும் இல்லாமல் கேட்பாரற்று கிடக்கிறது. குறிப்பாக கழிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இருக்கம் கழிப்பறையிலும் தண்ணீர் வசதி இல்லை. இதனால் கழிப்பறையை யாரும் பயன்படுத்தமுடியாத நிலை இருந்து வருகிறது. சில பயணிகள் வேறு வழியின்றி திறந்த வெளியில் செல்கின்றனர். இதனால் பெண் பயணிகள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

மேலும் ரயில் நிலையத்தில் இயங்கிய கேன்டீன் தற்போது செயல்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் பணிகள் பசிக்கு ஏதும் வாங்கி சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வசதி இல்லாததால் தாகத்திற்கு பயணிகள் தண்ணீர் குடிக்க வேண்டுமெனில் புதுக்கோட்டை நகர் பகுதிக்கு வர வேண்டும். பல இடங்களில் குடிநீர் குழாய்கள் இருந்தும் தண்ணீர் வருவதில்லை. குறிப்பாக புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் நாய்கள் சுற்றித்திரிகிறது. இதனால் ரயிலுக்கு செல்லும் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்கின்றனர். இவ்வாறு பயணிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. மேலும் காத்திருப்போர் அறையும் பூட்டிக்கிடக்கிறது. இதனால் வெட்ட வெளியில் பயணிகள் காத்துகிடக்கின்றனர். எனவே பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ரயில் பணிகள் கூறியதாவது: புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பயணிகளுக்கு எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை. குடிதண்ணீர், கழிப்பறை வசதிகள், காத்திருப்போர் அறை, கேன்டீன் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக கழிப்பறை வசதிகள் இல்லாததால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள சித்தன்னவாசல், திருமயம் கோட்டை போன்ற சுற்றுலா தலங்களை காண வெளியூரில் இருந்து ரயிலில் வரும் பயணிகள் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கியதும் இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் முகம் சுழிக்கின்றனர். ரயில் நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களை விரட்டி விட்டால் கடிக்க பாய்கிறது.

இதனை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் சிலர் இரவு நேரங்களில் குடித்துவிட்டு மதுபாட்டில்களை ரயில் நிலையம் பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால் ரயில்நிலையமா? மதுக்கடை பாரா என வெளியூர் பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர். பல இடங்களில் ரயில் நிலையத்தின் சுற்றுசுவர் இடிந்து கிடக்கிறது. இது குறித்து ரயில் நிலைய பணியாளர்களிடம் கேட்டால் எங்களுக்கும் எந்தவித வசதியும் இல்லாமல் தான் பணியாற்றி வருகிறோம் என்று சொல்கின்றனர். எனவே புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும், உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Infrastructure, Pudukkottai Railway Station
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...