புதுகையில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி: சீரமைக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மன்னர்காலத்தில் அமைக்கப்பட்ட பழுதடைந்த மருப்பிணி சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை டி.வி.எஸ். கார்னரில் இருந்து திருவரங்குளம் மேட்டுப்பட்டிக்கு செல்லும் மருப்பிணி சாலை உள்ளது. இந்த சாலை மன்னர் காலத்தில் புதுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புறவழிச்சாலையாக அமைக்கப்பட்ட சாலை ஆகும். இந்த சாலையில்தான் திருவரங்குளம் பகுதியில் இருந்து மதுரை, காரைக்குடி, திருமயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கார்கள், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலை டி.வி.எஸ். கார்னரில் இருந்து சேங்கைத்தோப்பு வரையிலும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்கக்கோரி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான மருப்பிணி சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: