கல்லணைக் கால்வாயில் மணல் திட்டுகளை அகற்றாததால் கடைமடைக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்: பொதுமக்கள் வரிப்பணம் ரூ.6 கோடி வீண்

அறந்தாங்கி: கல்லணைக் கால்வாயில் பல்வேறு இடங்களில் உள்ள மணல் திட்டுக்களை முறையாக அகற்றாததால் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவிரியில் வரும் தண்ணீரை தடுத்து, டெல்டா மாவட்ட பாசனத்திற்கு பயன்படுத்தவும், வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை பாதுகாக்கவும் தஞ்சையை ஆண்ட கரிகாலசோழன் காலத்தில் கல்லணை கட்டப்பட்டது. கல்லணையில் தேக்கிவைக்கப்படும் காவிரிநீர் காவிரி, வெண்ணாறு வழியாக சென்று தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாசன வசதி அளிக்கின்றன. மேலும் கல்லணைக்கு வரும் உபரிநீர் கொள்ளிடத்தில் திறந்துவிடப்படும். இவ்வாறு உபரிநீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலப்பதை விரும்பாத ஆங்கிலேயே பொறியாளர் எல்லீஸ் கடந்த 1920ம் ஆண்டு கல்லணையில் இருந்து புதிதாக வாய்க்காலை வெட்டத்தொடங்கினார்.

இதுதான் தற்போதைய கல்லணை கால்வாயாகும். கல்லணையில் இருந்து 148.76 கிமீ தூரத்தில் உள்ள மும்பாலை வரை உள்ள கல்லணைக் கால்வாய் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கல்லணைக் கால்வாயை முறையாக பராமரிக்காததால் பல இடங்களில் மணல் திட்டுகள், வாய்க்காலின் மையத்தில் நாணல் செடிகள், நெய்வேலி காட்டாமணக்கு செடிகள் மண்டியுள்ளதால் கல்லணையில் இருந்து 4,500 கனஅடி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக பொதுப்பணித்துறையினர் 3000 கன அடிக்கும் குறைவாக தண்ணீர் திறக்கின்றனர். இதனால் கடைமடைக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில் சம்பா சாகுபடிக்காக கல்லணை நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாயில் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதே அளவு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டால் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேராது. சுமார் 3500 கனஅடி வரை தண்ணீர் திறந்தால்தான் கடைடைக்கு சென்று சேரும். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க செயலாளர் சுப்பையா கூறியது: கல்லணைக் கால்வாயை ஆண்டுதோறும் முறையாக தூர் வாராததால் தண்ணீரை குறைத்தே திறக்கின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி தலைப்பிற்கு வரவேண்டிய 300 கனஅடி தண்ணீர் பல ஆண்டுகளாக வரவில்லை. தற்போது கல்லணை கால்வாயை தூர்வார ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதிக மணல் திட்டுக்கள் உள்ள கல்விராயன்பேட்டை, வெட்டிக்காடு, ஈச்சங்காடு பகுதிகளில் தூர்வாராமல் பெயரளவில் சில இடங்களில் தூர்வாருகின்றனர்.

தமிழக அரசு புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கல்லணைக் கால்வாயில் உள்ள மணல் திட்டுக்கள் மற்றும் நாணல் செடிகளை தூர்வாரி அகற்ற வேண்டும் என்றார். இதுகுறித்து ஒருங்கிணைப்பு சங்கத்தின் துணைத் தலைவர் கண்டையன்கோட்டை கண்ணன் கூறியது: கல்லணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லை வரை கால்வாயின் பல இடங்கள் மணல் திட்டுக்களால் மேடாக உள்ளன. இந்த இடத்தில் தண்ணீர் கரையை தொட்டுச் செல்வதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இப்பகுதிக்கு வரும் தண்ணீரை குறைக்கின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் சேதுபாவாசத்திரம் பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறினார்.

சங்க நிர்வாகி பொன்கணேசன் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணைக் கால்வாயை யாரும் கண்டுகொள்ளாததால் தூர்வார ஒதுக்கப்படும் நிதி என்ன ஆகிறது என்றே தெரியவில்லை. தண்ணீர் திறக்கப்படும் சமயத்தில் கல்லணைக் கால்வாயில் கட்டுமானப் பணிகளை செய்வது வாடிக்கையாய் போய்விட்டது. நேற்றுமுன்தினம் கல்லணை திறக்கப்பட்ட நிலையில் இடையாத்தி பகுதியில் கால்வாயின் குறுக்கே நடைபெறும் பாலம் கட்டும்பணியை காரணம் காட்டி புதுகை மாவட்ட கடைமடை பகுதிக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி, கல்லணைக் கால்வாயில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றி தினசரி 4,500 கனஅடியும், நாகுடி தலைப்பிற்கு 300 கன அடியும் முறைவைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே விவசாயிகள் கோரிக்கையாகும்.

Related Stories: