அருப்புக்கோட்டையில் 25 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: திறக்கும் நேரம் தெரியாமல் பொதுமக்கள் தவிப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் 25 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படும் குடிநீர், எப்போது வரும் என தெரியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு, தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த திட்டம் மூலம் நகருக்கு தினசரி 49 லட்சம் லிட்டர் குடிநீர் வரவேண்டும். ஆனால், தினசரி 30 லட்சம் லிட்டருக்கு மேல் வருவதில்லை என கூறுகின்றனர். மேலும், அடிக்கடி குழாய் உடைப்பு, லீக்கேஜ், மின்தடை காரணங்களால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நகருக்கு வழங்க வேண்டிய குடிநீரை முழுமையாக வழங்குவதில்லை.

இதனால், 25 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எப்போது தண்ணீர் வரும் என தெரியாமல், பொதுமக்கள் வெளியூருக்கு விஷேசங்களுக்கு செல்வதைக் கூட தவிர்ப்பதாக கூறப்படுகிறது. ஒருமுறை வரும்போது குடிநீர் வரும்போது தவறவிட்டால், மேலும், 25 நாட்கள் காத்திருக்க வேண்டும். எனவே, குடிநீர் வரும் நாள், நேரத்தை முன்கூட்டியே, நகராட்சி பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். குடிநீர் விநியோகம் தாமதமானாலும், அதற்கான காரணத்தையும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும்.  

இது தொடர்பாக நகராட்சி கமிஷனர், பொறியாளர், பிட்டர் ஆகியோரின் செல்போன் நம்பர்களை நகராட்சி அலுவலகம் மற்றும் வரிவசூல் மையங்களில் எழுதி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டிகள்: அருப்புக்கோட்டையில் நகராட்சி  அலுவலகம், திருச்சுழி ரோடு கேவி பார்க், காந்தி மைதானம், அந்திக்கடை  பொட்டல், ஜவஹர் சங்கம் தெரு, நேதாஜி ரோடு, டவுன் காவல்நிலையம் பின்புறம்,  அஜீஸ்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் மேல்நிலைதொட்டிகளில், தாமிரபரணி குடிநீரை மேலேற்றி, அந்தந்த பகுதிகளில் உள்ள குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்த குடிநீர் தொட்டிகளை வருடக்கணக்கில் சுத்தம் செய்யவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல் பரவி வருகிறது. குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாமல், குடிநீர் விநியோகம் செய்தால்  தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம்  குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளை மாதம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இது தொடர்பான விவகாரங்களை அந்தந்த குடிநீர்  மேல்நிலைத்தொட்டி அமைந்த பகுதியில் உள்ள விளம்பரப் பலகையில் எழுதி வைக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>