×

பதவி உயர்வு வழங்க கோரி சென்னை ஆணையரகம் முன் அக்.9ம் தேதி ஆர்ப்பாட்டம்: உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அறிவிப்பு

நாகை: உணவு பாதுகாப்பு அலுவலர்களை மாவட்ட நியமன அலுவலர்களாக பதவி உயர்வு மூலம் நிரப்பிட தமிழக அரசை வலியுறுத்தி வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி சென்னையில் உள்ள ஆணையரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நாகையில் நேற்று நடந்தது.மாநிலத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் நடந்துள்ள பணிகள் மற்றும் எதிர்கால பணிகள் குறித்து பேசினார். மாநிலப் பொருளாளர் ஜான்சிம்சன் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.தங்களது குடும்பத்தை விட்டு நீண்ட தூரங்களில் பணியாற்றி வரும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். பணி விதிகளில் தேவையான மாறுதல்களை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஒரு பதவி உயர்வு கூட இல்லாமல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உறுதியளித்தார். ஆனால் ஏற்றுக்கொண்ட முடிவுகள் தொடர்பாக இதுவரை ஆணையரகத்தில் எந்த ஒரு நடவடிக்கையில் எடுக்கவில்லை. எனவே உடனே பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட முடிவுகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.தமிழகத்தில் உணவு பாதுகாப்புத் துறை ஆரம்பித்த பொழுது தற்காலிக ஏற்பாடாக ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நகராட்சிகளிலும் பணியாற்றிய டாக்டர்கள் மாவட்ட நியமன அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் மாற்றுப்பணியில் பணியாற்ற அனுமதிக்கப்பட்ட காலம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

எனவே உணவு பாதுகாப்பு அலுவலர்களை மாவட்ட நியமன அலுவலர்களாக பதவி உயர்வின் மூலம் நிரப்பிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசும், மாநில உணவு பாதுகாப்பு ஆணையரகமும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி சென்னை ஆணையரகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Protests , Chennai Commission, seeking promotion,Food Safety,Officers Announced
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...