×

கூடுதலாக 200 பொக்லைன் கொண்டு வரப்பட்டு தூர்வாரும் பணி 10 நாட்களில் முடிக்கப்படும்: பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் தகவல்

நாகை: காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணிக்காக கூடுதலாக 200 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் 10 நாட்களில் முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் பாலாஜி கூறினார்.நாக¬ மாவட்டத்தில் நடந்து வரும் குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் தொடர்பாக அலுவலர்கள், விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் மற்றும் குடிமராமத்துப் பணிகள் சிறப்பு அலுவலர் பாலாஜி தலைமை வகித்தார். கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் பாலாஜி பேசியதாவது: தூர் வாரும் பணிகள் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களில் ரூ.60 கோடிமதிப்பில் 250 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த தூர்வாரும் பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதே இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் மிகவும் அவசியமான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் எடுத்துக் கொள்ளபட்டு 10 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்படும். இந்த பணிகளுக்காக தமிழகம் முழுவதுமிருந்து 180 பொக்லைன் இயந்திரங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வரவழைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் கூடுதலாக 200 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்படும். இதனால் இந்த பணிகள் விரைவாக முடிக்கப்படும். குடிமராமத்துப் பணிகள் குறைபாடும், தடையுமின்றி 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டது போல் இந்த தூர்வாரும் பணிகளும் குறை இன்றி, குறித்த நேரத்திற்குள் முடிக்கப்படும். பணிகளை கண்காணிக்க மாவட்டத்திற்கு ஒரு ஐஏஎஸ் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுப்பணித்துறையின் சார்பு அலுவலகங்களிலிருந்து 100 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் 29 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் வெள்ம் வந்தபோது ஏற்பட்ட சிரமங்களை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் விவசாயிகள் நேரடியாக பார்வையிட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே குறைகள் இருந்தால் கலெக்டர் அல்லது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கவனத்திற்கு கொண்டு வரலாம். தற்பொழுது எடுத்துக் கொண்ட 29 பணிகளில் தண்ணீர் வரத்து கால்வாய்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதரப் பணிகள் வரும் பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்றார். கஜா மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு கூடுதல் திட்ட இயக்குநர் பிரதீப்குமார், டிஆர்ஓ இந்துமதி, வேளாண்மை இணை இயக்குநர் நாராயணசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆசைத்தம்பி மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : An additional,200 bocline, brought , completed , 10 days
× RELATED பாரதியார் நினைவு தினம் மகாகவி நாள்:...