×

நீலகிரியில் பெய்த மழையால் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு: பயணிகள் அவதி

மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் போக்குவரத்து நேற்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.  சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் போக்குவரத்தை கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை 3 நாட்கள் ரத்து செய்திருந்தது.நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்ததால் கடந்த 14ம் தேதி முதல்  மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. இந் நிலையில், நேற்று வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.

ரயிலில் 175க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்தனர். மலை ரயில் கல்லாறு ரயில் நிலையத்தை கடந்து காலை 8.23 மணிக்கு அடர்லி ரயில் நிலையத்தை அடைந்தது  அடர்லி- ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டு ரயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டும், மண் சரிந்தும் விழுந்தது. இதனால், அடர்லி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் ஊட்டிக்கு செல்ல முடியாமல் மீண்டும் அங்கிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு காலை 11.25 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால், பயணிகள் அவதிப்பட்டனர்.  மேட்டுப்பாளையம் வந்த சுற்றுலாப்பயணிகளுக்கு குன்னூர், ஊட்டி செல்ல தேவையான பஸ் வசதியை ரயில்வே நிர்வாகம் செய்திருந்தது.

 மலை ரயில் இருப்புப்பாதை பிரிவு பொறியாளர் ஜெயராஜ் தலைமையில் ரயில்வே தொழிலாளர்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.நேற்று ஒருநாள் மட்டும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இப்பணி நேற்று முடிந்ததால் இன்று (திங்கள்கிழமை) முதல் மலை ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 10.30 மணிக்கு புறப்பட்டு காலை 11.25 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.


Tags : Soil degradation, Mettupalayam-Ooty, mountain railway
× RELATED அணைக்கட்டு ஒன்றியத்தில்...